பொள்ளாச்சி, உடுமலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், பொள்ளாச்சி சமத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. சப்-கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு செய்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர். அப்போது, கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்வை ஆய்வு செய்து விபரங்களை கேட்டறிந்தார்.வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, கற்பகம் மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம், சமத்துார் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட, ஐந்து மையங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.மருத்துவர்கள் உள்பட, 25 மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பணியாளர்கள், 'ஆன்லைனில்' பதிவு செய்த பின், அவர்களுக்கு வேறு ஏதாவது நோய்கள் உள்ளதா; ஆரோக்கியமாக உள்ளனரா என்பது குறித்து விசாரிக்கப்படும். தடுப்பூசி போட்ட பின், கண்காணிப்பு அறையில், 30 நிமிடம் காத்திருக்க வைத்து, பின்விளைவுகள் ஏற்படுகிறதா என கண்காணிப்பு செய்யப்படும். பின்விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவை சுகதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.இதில், சுகாதார களப்பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சேரில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவராக அடையாள அட்டை கொண்டு வந்தனர். இணையதளத்தில் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. அதன்பின், தடுப்பூசி போடும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.உடுமலைஉடுமலை அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.பாதுகாப்பாக வைக்கப்படும் மருந்து எடுத்து வருவது, வரும் நபர்களை பதிவு செய்தல், தனி மனித இடைவெளியுடன் காத்திருத்தல், ஒருவருக்கு ஒருவர் நெருங்காமல், திருப்பி அனுப்பி வைத்தல், சோப், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒத்திகை நடந்தது.இந்நிகழ்வில், மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் பாக்கியலட்சுமி, தலைமை மருத்துவர் முருகன் மற்றும் டாக்டர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.- நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE