மேட்டுப்பாளையம்:கல்லாறு சமத்துவபுரத்துக்கு செல்ல, ஊட்டி ரயில் பாதையின் குறுக்கே, சுரங்கப்பாதை அமைக்க, ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.ஓடந்துறை ஊராட்சியில், சாதாரண கூட்டம் நடந்தது. மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:தேவி: கல்லாறுபுதுார் ஆதிவாசி காலனியில், குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைத்து, தார் சாலை அமைக்க வேண்டும்.ரேவதி: கல்லாற்றில் சமத்துவபுரம், அகத்தியர் நகர் ஆகிய பகுதிகளுக்கு சாலை வசதி ஏதும் இல்லை. இப்பகுதி மக்கள் அனைத்து தேவைகளுக்கும், ஊட்டி மலை ரயில் பாதையை கடந்து செல்கின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம், ரயில் பாதையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.ஜானகி, துணைத்தலைவர்: ஊட்டி சாலை, கல்லாறுபுதுாரில் இருந்து மயானம் வரை உள்ள சாலைகளுக்கு தார் போட வேண்டும்.வடிவேல்: வினோபாஜி நகரில் சேதமடைந்துள்ள சாக்கடைகளை சீர் செய்து புதிதாக அமைக்க வேண்டும்.உமர் பாரூக்: நரிப்பள்ளம் சாலை, அரசு புறம்போக்கு நிலத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும்.நீலாவதி: பாலப்பட்டி பிரதான சாலையில் இருந்து வனப்பகுதி வரையுள்ள குறுக்கு சாலைகளை, சீர்செய்து தார் சாலையாக மாற்ற வேண்டும்.வெள்ளிங்கிரி: உப்பு பள்ளத்திலிருந்து, மேல்நிலை தொட்டிக்கு செல்லும் சாலைகளை, புதிதாக சீரமைத்து தார் சாலையாக அமைக்க வேண்டும்.விஜயா: ஊமப்பாளையத்தில் போதிய பொது கழிப்பிட வசதி இல்லாததால், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். அதனால், இப்பகுதியில் ஆண்களுக்கு என, தனியாக பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும்.முருகையன்: பாலப்பட்டி சாலையில் இருந்து, நாகையன் தோட்டம் வரை சாலையோரங்களில், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் தங்கவேல் பேசுகையில், ''தார் சாலைகள் அனைத்தும், 14வது நிதிக்குழு நிதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது நிதியில் இருந்தும், சாலைகள், அடிப்படை வசதிகள், சாக்கடைகள், மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்லாறில் அகத்தியர் காலனி, சமத்துவபுரத்திற்கு, ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பது குறித்து, ஊராட்சியின் சார்பில், ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது,'' என்றார்.ஊராட்சி செயலர் செந்தில் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE