புதுடில்லி: பல ஆண்டுகளுக்கு முன், காங்., அரசால் இலங்கையிடம் இழந்த கச்சத் தீவை மீட்க, பிரதமர் மோடி ரகசிய அதிரடி திட்டம் ஒன்றை தீட்டிஉள்ளார்.இலங்கை அரசு -- விடுதலை புலிகள் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, காங்கிரஸ் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் மற்றும் முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இடையே, 'இந்தோ -- இலங்கை' ஒப்பந்தம் கையெழுத்தானது.அதில், சிங்களர்கள் மற்றும் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கக்கூடிய, 13வது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. இந்தச் சட்ட திருத்தம், இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்குவதையும், சிங்களம் மற்றும் தமிழை தேசிய மொழிகளாக அறிவிப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது. இந்தச் சட்ட திருத்தம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூன்று நாள் பயணமாக, அண்டை நாடான, இலங்கை சென்றார். அப்போது, 'இலங்கையின் சொந்த நலன் அடிப்படையில், அங்கு வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியமான வாழ்க்கை நிறைவேற்றப்பட வேண்டும். 'இலங்கை அரசியலமைப்பின், 13வது சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதன் வாயிலாக, தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கிடைக்க வாய்ப்பு உருவாகும்' என, தெரிவித்தார்.இந்த பேச்சு, இலங்கை தமிழர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இது தவிர, இலங்கை அதிகாரி ஒருவர், மூன்று மாதங்களில், இருமுறை புதுடில்லி வந்து சென்றிருக்கிறார். அவரிடம், தமிழக மக்களின் வாழ்வுரிமை பகுதியான கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப்பெற, பேச்சு நடந்துள்ளது. இதற்கான பல முயற்சிகளை அரசியல், அதிகார மற்றும் துாதரக அளவில் மத்திய அரசு செய்து வருகிறது.திட்டத்தை வேகப்படுத்தி, தன் பதவிக் காலத்திற்கு உள்ளாகவே, கச்சத்தீவை மீட்க, பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், கச்சத்தீவு அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE