மேட்டுப்பாளையம்:'மேட்டுப்பாளையம் -- கோவை இடையே பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும்' என, வியாபாரிகள் சங்கத்தினர், ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஊட்டி மலை ரயில், ஒன்பது மாதங்களுக்கு பின், டிச. 31ம் தேதியிலிருந்து, மீண்டும் மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்கப்பட்டது. ரயில் பாதைகளை பார்வையிடுவதற்காக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சீனிவாசராவ் மேட்டுப்பாளையம் வந்தார். இவர், ஊட்டி மலை ரயில் பெட்டிகள், இன்ஜின், பல் சக்கரம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின், சிறப்பு ரயிலில் அதிகாரிகள் குழுவுடன், மலை ரயில் பாதையை ஆய்வு செய்வதற்காக, ஊட்டி புறப்பட்டு சென்றார்.அப்போது, மேட்டுப்பாளையம் வணிகர் சங்கம் சார்பில், தலைவர் ஹபிபுல்லா, கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர், கோரிக்கை மனு கொடுத்தனர்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது: கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து துடியலுார் வரை மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன. அதனால், கோவை சாலையில் போக்குவரத்து, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, நேரம் அதிகமாகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி, உடனடியாக மேட்டுப்பாளையம் - கோவை இடையே நிறுத்தி வைத்துள்ள பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளனர்.மனுவை பெற்ற சேலம் கோட்ட ரயில்வே மேலாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE