முயற்சி செய்தால், முடியாதது எதுவுமில்லை. உடலில் ஏதாவது பாதிப்பு என நினைத்து முடங்கி கிடக்காமல், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற, தன்னம்பிக்கையை வளர்த்தால், சிகரத்தை அடைய முடியும் என்கிறார், ஒரு சாதனையாளர்.மேட்டுப்பாளையம், சுந்தர விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நுார்முகமது 50. இவர் பிறக்கும் போது, இரு கைகளிலும் விரல்கள் இல்லாமல், ஒரு காலும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்காலத்தில் இவர் ஒரு தன்னம்பிக்கை மிக்க மனிதராக இருப்பார்; சாதிப்பார் என, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.மற்ற குழந்தைகளைப் போல், இவரையும் பெற்றோர் பள்ளியில் சேர்த்தனர். நுார் முகமது, இரு கைகளையும் பயன்படுத்தி எழுத பழகினார். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்த போதும், காலப்போக்கில் பழக்கத்துக்கு வந்தவுடன், மற்ற குழந்தைகளை போல் இவரும் எழுதப் பழகிக் கொண்டார்.இதுகுறித்து, நுார் முகமது கூறியதாவது:மற்ற மாணவர்களை போல், நம்மால் எழுத முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மை என்னுள் இருந்தது. ஆனால் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்கள் காட்டிய ஊக்கத்தால், தொடர்ச்சியாக எழுதும் பயிற்சியில் அதிக நேரம் செலவிட்டேன். தேர்வுகளில், எனக்கென்று நேரம் ஒதுக்காமல், மற்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய, இரண்டரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கினர். அனைத்து கேள்விகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் பதில் எழுதி தேர்ச்சி பெற்றேன். பி.காம்., பட்டப்படிப்பு வரை படித்துள்ளேன்.மேலும், டைப்ரைட்டிங், எனக்கு தனியாக நேரம் ஒதுக்காமல், குறிப்பிட்ட நேரத்திலேயே அடித்து முடிக்க வேண்டும் என கூறினர். கடுமையான பயிற்சி பெற்று, லோயர், ஹையர் ஆகிய இரண்டு தகுதிகளை பெற்றுள்ளேன்.படித்தவுடன், நகைக்கடையில், பல ஆண்டுகள் பணியில் இருந்தேன். தற்போது தனியாக தொழில் செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை, தானம் செய்வதற்கு செலவிடுகிறேன். உடலில் பாதிப்பு என்று நினைத்து உட்கார்ந்திருந்தால், நமது வாழ்க்கையை, நாமே முடக்கி கொள்வதற்கு சமமாகும். எனவே கடுமையாக முயற்சி செய்தால், முடியாதது ஒன்றுமில்லை. இறுதியில் வெற்றியை அடையலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE