புதுடில்லி:ஒரே பாலினத்தவரின் திருமணங்களை சட்டப்படி அங்கீகரிக்ககோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய மற்றும் டில்லி மாநில அரசுகளுக்கு டில்லி உயர் நீதிமன்றம் மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
டில்லி உயர் நீதிமன்றத்தில் அபிஜித் அய்யர் மித்ரா உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஓரினச்சேர்க்கையை உச்ச நீதிமன்றமே அங்கீகரித்து அது குற்றம் அல்ல என கூறியுள்ளது. ஆனால் ஹிந்து திருமண சட்டத்தில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதியளிக்கப்படவில்லை.எனவே ஒரே பாலின திருமணங்களை ஹிந்து திருமண சட்டம் மற்றும் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒரே பாலினத்தைச் சேர்ந்த சிலர் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய தங்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரிக்க கடந்த நவம்பரில் முடிவு செய்தது.இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி மத்திய அரசு மற்றும் டில்லி மாநில அரசுகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் 'இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க சிறிது கால அவகாசம் தேவை' என்றார்.இதை ஏற்ற நீதிபதிகள் 'இது பற்றி மத்திய அரசு மற்றும் டில்லி மாநில அரசுகளுக்கு பிப். 25ம் தேதிக்குள் பதில் அளிக்க கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது' எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE