கோவை;பாஸ்போர்ட் விசாரணைக்காக கிராமப்புற மக்கள் அலைவதை தடுக்க, கோவை மாவட்ட போலீசார் புதிய நடைமுறையை துவங்கியுள்ளனர்.கிராமப்புற மாணவர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, போலீஸ் விசாரணைக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், குறிப்பிட்ட கிராம எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் பாஸ்போர்ட் விசாரணைக்கு வரும் அதிகாரிகள் குறித்தும், விண்ணப்பித்தவர்களுக்கு தெரிவதில்லை. இதனால், பாஸ்போர்ட் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கோவை மாவட்ட போலீசில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு கூறியதாவது:கிராமப்புற பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். விபத்து, திருட்டு நடக்கும்போது அவற்றை போலீசாருக்கு தெரிவிக்க கிராம விழிப்புணர்வு போலீஸ் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தம், 283 கிராமங்களில், 397 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வி.ஏ.ஓ., ஊராட்சி தலைவர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள பலர் அடங்கிய வாட்ஸ்ஆப் குழுவை துவங்கி, அதில் தகவல் பரிமாறிக் கொள்வர்.பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள், போலீஸ் விசாரணைக்கு அலையத் தேவையில்லை. போலீஸ் விசாரணை குறித்த தகவல் மொபைல்போனுக்கு வந்தவுடன் கிராம விழிப்புணர்வு போலீஸ் அலுவலரை தொடர்பு கொண்டால் போதும். உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தகவல் தெரிவித்து, விசாரணையை உடனடியாக முடிக்க வழிவகை செய்வார். தற்போது மூன்று நாட்களுக்குள், பாஸ்போர்ட் விசாரணை முடிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE