பாரதிதாசன், பெரியார் பல்கலை துணைவேந்தர்கள் பதவி நீட்டிக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் உயர்கல்வித்துறை செயலாளரின் தன்னிச்சையான முடிவுகளுக்கு குட்டு வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைகளில் துணைவேந்தர் நியமனங்களில் பல ஆண்டுகளாக பல்கலை மானியக்குழுவின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், துணைவேந்தராக நியமிக்கப்படுபவரின் நன்னடத்தை குறித்த விவரங்களை சரிவர கண்காணிக்காமலும், பலகோடிகளை பெற்றுக்கொண்டு துணைவேந்தர்கள் நியமனம் நடந்துள்ளனது.
இது குறித்து பல்வேறு காலக்கட்டங்களில் கல்வியாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தும் எந்த வித பயனும் இல்லை. இவ்வாறு நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் சிலர் உயர்கல்வித் துறையினரோடு இணைந்து பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி பல்கலைகளின் மாண்பையும் கெடுத்து வந்தனர்.ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பிறகு துணைவேந்தர் நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடனும், தகுதி அடிப்படையிலும் நடைபெற்றன.
என்னதான் துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையான முறையில் நடைபெற்றாலும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கையில் சிக்கி துணைவேந்தர்கள் செயல்பட முடியவில்லை. பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டங்களில் நிதி சம்மந்தமான விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டால், அந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சிண்டிகேட் தீர்மானங்களை மறுபரிசீலனை செய்து, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கொரோனா காலத்தில் பல்கலைகளில் பணியாற்றும் ஆசிரியர், அலுவலர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே திணறும் நிலை உள்ளபோது, பல்கலைகளில் தேவையில்லாத ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குகின்றனர். இதனால் பல்கலைக்கழகங்கள் கடும் நிதிச்சுமைக்கு தள்ளப்படும்.இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பல்கலை மானியக்குழுவின் விதிகளுக்கு மாறாக ஆசிரியர் நியமன விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை எதிர்த்து பல்கலை ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கில் பல்கலை சார்பில் உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே விளம்பரங்கள் வெளியிடப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி உயர்கல்வித்துறை செயலர் அந்த பதவியை வகிப்பதற்கான தகுதி உடையவர்தானா என கேள்வி எழுப்பி, ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்தது. பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கரின் பதவிக் காலம் ஜன.,7ல் நிறைவடைந்தது.
புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் துணைவேந்தர் பொறுப்பு குழு நியமிக்கப்பட்டது.இந்நிலையில் கவர்னர் அலுவலகத்தில் இருந்து மறுஅறிவிப்பு வரும் வரை மணிசங்கருக்கு பணி நீட்டிப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதைப் போலவே ஜன., 7ல் பணி நிறைவு பெற்ற பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலுவுக்கும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது கல்வியாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்படும் வரை உயர்கல்வித்துறை செயலரின் தன்னிச்சையான முடிவுகளை நிறைவேற்றுவது தடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE