ஓராண்டாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு வருகின்றனர். ஒரு வழியாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்த ஒத்திகை நேற்று தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, என்.ஆர்.டி. மருத்துவமனை, பொம்மையகவுண்டன்பட்டி, பெரியகுளம் அரசு மருத்துவமனை, வீரபாண்டிஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்தது.
நோயாளிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஊசி போடும் அறை தயார் செய்தல், ஓ.பி.பதிவு செய்தல், ஆதார் பதிவு, டாக்டர் பரிசோதித்தல், தடுப்பூசி போடுதல், ஓய்வு எடுத்தல், மன நல ஆலோசனை என ஒத்திகை நடந்தது. ஒவ்வொரு மையத்திலும் தலா 25 பேருக்கு ஊசி போடும் ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஆய்வு
தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இப்பணியை ஆய்வு செய்த கலெக்டர் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் என 7354 பேருக்கு வழங்கப்பட உள்ளது. 2ம் கட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 3ம் கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 4ம் கட்டத்தில் 60 வயதுக்கு உட்பட்ட இணை நோயாளிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக மக்களுக்கும் போடப்படும். அரசால் தடுப்பூசி விரைவில் வழங்கப்பட உள்ளது.
அதனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி, 6 அரசு மருத்துவமனைகள், 41 ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை இயக்குனர் அலுவலகம் என 49 இடங்களில் குளிர்சாதன வசதியில் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில், தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE