அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பகுதிகளில் தொடர் மழைக்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் விளைந்து 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் வயல்களில் சாய்ந்து நீரில் முழ்கின. வயல்களில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற விவசாயிகள் முயற்சித்தாலும் தொடர்மழையால் நெற்கதிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து, நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலுார் கொங்கம்பட்டி, செம்மினிபட்டி கண்மாய்களில் தேங்கிய மழை நீரைகொண்டு நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை நேரத்தில் ஒரு வாரத்திற்குமேலாக தொடர்ந்து பெய்த மழைக்கு 80 ஏக்கர் நெற்கதிர்கள்சாய்ந்துவிட்டன.
விவசாயி பகுர்தீன்:
வங்கி கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து விளைந்த நெற் கதிர்கள் சாய்ந்துவிட்டதால்வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தண்ணீர் வற்றி அறுவடை செய்வதற்குள் நெல் முளைத்து வீணாகிவிடும். வேளாண் துறையினர் அறுவடை செய்ய இயந்திரங்கள் ஏற்பாடு செய்வதோடு, வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் கவலை
உசிலம்பட்டி பகுதியில் சாரல் மழையால் அறுவடை தாமதமாகிறது. பருத்தியில் இந்தாண்டும் சாரல் மழையால் பஞ்சு வெடிக்காமல் சதைக்காயாக மாறி நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. திருமங்கலம் பிரதான கால்வாய் பகுதியில் விளைந்துள்ள நெல்லும் மழையால் அறுவடைக்கு தாமதமாகிறது. கண்மாய்களுக்கு நீர் வரத்து ஏற்படாமல் சாரல் மழை பெய்து விளைச்சலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE