திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விற்கும் பொருட்களுக்கு அன்றைய தினமே பணம் பட்டுவாடா செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளைபொருட்கள் வரத்து உள்ள கமிட்டி. இ.நாம் திட்டத்தில் நடந்த முறைகேட்டால், விவசாயிகளுக்கு தினசரி பணப்பட்டுவாடா என்பது கேள்விக்குறியானது.மாதக்கணக்கில் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைக்கப்பட்டது. இதனை கண்டித்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராடினர். இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க., காங்., உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் இறங்கினர்.
பிரச்னை பூதாகரமானதால் கமிட்டி நிர்வாகம், வியாபாரிகள் சங்கத்தினர், விவசாயிகளின் பிரச்னையை தீர்க்கும் வரை தற்காலிகமாக ஏலத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்து, கமிட்டியை மூடியது.மார்க்கெட் கமிட்டி உயர் அதிகாரிகளின் கணக்கு சரிபார்ப்புக்கு பிறகு 90 சதவீத விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.அதனையொட்டி, கமிட்டியை திறப்பது குறித்து தாசில்தார் கார்த்திக்திலகன், மார்க்கெட் கமிட்டி செயலாளர் ஜெயக்குமார், வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், பொருளாளர் கென்னடி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், வியாபாரிகள் கொள்முதல் செய்யும் விளைபொருட்களுக்கு தினசரி கமிட்டி நிர்வாகத்திடம் பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத வியாபாரிகளை ஏலத்தில் அனுமதிக்கக்கூடாது. விவசாயிகளுக்கு தினசரி பண பட்டுவாடா செய்யும் வகையில் இ.நாம் திட்டத்தை அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதத்திற்கு பிறகு கடந்த 4ம் தேதி கமிட்டி திறக்கப்பட்டது.கமிட்டியின் தற்காலிக கண்காணிப் பாளர்களாக தாமோதரன், பஞ்சமூர்த்தி நியமிக்கப்பட்டனர்.
ஏற்கனவே இருந்த கண்காணிப்பாளர் செல்வம் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை கணக்கை சரிபார்க்கும் பணியில் நியமிக்கப்பட்டார்.இச்சூழலில் கடந்த 5 நாட்களில் ரூ.38 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்துள்ளது. நேற்று உளுந்து அதிகபட்ச விலையாக 80 கிலோ மூட்டை ஒன்று ரூ.8,000 ஏலம் போனது.வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்த விளைபொருட் களுக்கான தொகையை அன்றைய தினமே கமிட்டி நிர்வாகத்திடம் செலுத்தியதால் கமிட்டி நிர்வாகமும் உடனுக்குடன் விவசாயிகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்தது.இதன் மூலம் விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக தினசரி பணப்பட்டுவாடா பெற்று வருகின்றனர்.
மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் தினசரி பணப் பட்டுவாடா நடைபெறுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலை தொடர கமிட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE