ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை, இணை இயக்குனர் கோமதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் முன்னிலையில் நடந்தது. பணிகளை துவக்கி வைத்து, கலெக்டர் கதிரவன் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி திட்டத்தில், சவால்களை கண்டறியும் பொருட்டு, ஈரோடு அரசு மருத்துவமனை, ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகர் நல மையம், கேர் 24 என்ற தனியார் மருத்துவமனை என, ஐந்து இடங்களில் ஒத்திகை நடந்தது. தடுப்பூசி செலுத்தும் நபருக்கு, முன்னதாகவே ஆரோக்கிய பரிசோதனை செய்து, அவருக்கு தடுப்பூசி போடும் நாள், நேரம், இடம் ஆகியவை எஸ்.எம்.எஸ்., மூலம் போனில் அனுப்பி வைக்கப்படும். குறித்த நேரத்தில் அவரது உடல் சூடு, ஆரோக்கிய நிலை பரிசோதித்து, அவர்தான் குறிப்பிட்ட நபரா என ஆதார், பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தி, தடுப்பூசி போடப்படும். பின்னர் அவரது விபரம், 'கோவின்' செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். தடுப்பூசி போடப்பட்டு, 30 நிமிடம் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். அவ்விடத்தில், டாக்டர்கள் தயார் நிலையில் இருப்பர். முதற்கட்டமாக அனைத்து மருத்துவ, சுகாதார பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணி முன்கள பணியாளர்கள், மூன்றாம் கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், நான்காம் கட்டமாக சாதாரண மக்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன் பின், ஒரு மாத இடைவெளியில், மீண்டும் பூஸ்டர் போன்ற தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போட, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE