ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பெரியார் நகர் ஆர்ச் டூ ஆர்ச், கலைமகள் பள்ளி சாலை, கச்சேரி வீதி தொடங்கி காந்திஜி சாலை வரையுள்ள ஸ்டேட் பாங்க் சாலை, என மூன்று சாலைகள் ஸ்மார்ட் சாலையாக மாற்றப்படுகிறது. இதில் பல இடங்களில் இன்ஸ்பெக் ஷன் தொட்டி அமைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பின்றி திறந்து கிடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, ஸ்டேட் பாங்க் சாலை கால்நடை மருத்துவமனை அருகில், சாலை மட்டத்தில், நீட்டிய கம்பிகளுடன் திறந்து கிடந்த தொட்டிக்குள், பெண் ஒருவர் ஓட்டி வந்த கார், தொட்டிக்குள் இறங்கி சிக்கியது. பலர் முயற்சித்தும் எடுக்க முடியவில்லை. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், எஸ்.ஐ., விஜயகுமார், ஒரு மணி நேரம் போராடி காரை வெளியேற்றினர். இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: இதேபோல் பல இடங்களில் பாதுகாப்பின்றி இன்ஸ்பெக் ஷன் தொட்டிகள் திறந்து கிடக்கின்றன. ஒப்பந்ததாரர்களின் மெத்தனமும், பணிகளை முறையாக கண்காணிக்காத மாநகராட்சி அதிகாரிகளின் அவலத்தையுமே இது காட்டுகிறது. காருக்கு பதிலாக டூவீலர் விழுந்திருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். எனவே, இன்ஸ்பெக்சன் தொட்டிகளுக்கு, உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE