கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவ மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய மூன்று ஏரிகளில் இருந்து, 5.30 டி.எம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு, வீணாக கடலில் கலந்தது தெரியவந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நான்கு ஏரிகளுக்கும், வடகிழக்கு பருவமழை காலத்தில், போதிய அளவு நீர் வரத்து கிடைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்தும், சாய்கங்கை கால்வாயில் இருந்தும், கிருஷ்ணா நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு வந்து, அங்கிருந்து கால்வாய்கள் வழியாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. செப்., முதல் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து உள்ளது.இந்த நீர், புழல் மற்றும் செம்பரம்பாக்கத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தது.
அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவ மழையால், நான்கு ஏரிகளுக்கும் நீர்வரத்து மெல்ல அதிகரித்தது. இதனால், முழுக்கொள்ளளவை நெருங்கிய ஏரிகளில் இருந்து, பாதுகாப்பு கருதி, டிச., 4ம் தேதி முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த, 7ம் தேதி நிலவரப்படி, ஏரிகளில் இருந்து, 5.30 டி.எம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த நீரை வைத்து, சென்னையின், 160 நாள் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்திருக்க முடியும்.




வெளியேறியது எவ்வளவு?
காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடக்கு பகுதி, செங்கல்பட்டு மாவட்டத்தின் வடக்கு பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்து, மழைக்காலத்தில் வெளியேறும் உபரிநீர், அடையாறு, கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் வழியாக, வங்க கடலில் கலக்கின்றன. வடகிழக்கு பருவமழைக்கு, மூன்று மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. இதில், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் மட்டும், 5.3 டி.எம்.சி., உபரிநீர் வெளியேறி உள்ளது. மற்ற நீர்நிலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவு எடுக்கப்படவில்லை. அடையாறு ஆற்றில், எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பதை கணக்கிட மட்டுமே, பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அடையாறு ஆற்றில், கடந்த, 39 நாட்களில், 3.5 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு பெய்யும் சராசரி மழையில், எவ்வளவு நீர் வீணாக கடலுக்கு செல்கிறது என, பொதுப்பணித்துறை கணக்கிட்டால் தான், அதை சேமிக்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்த முடியும். கணக்கே இல்லாமல் இருந்தால், என்ன உருப்படியான திட்டத்தை வகுக்க முடியும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் விளக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE