புதுடில்லி: கொரோனா தடுப்பூசி மற்றும் மேட் இன் இந்தியா ஆகியவற்றில், மனித நேயத்தை காக்க இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள், பல வெளிநாடுகளில், தங்களின் அடையாளத்தை பலப்படுத்தியுள்ளனர்.ஆரம்ப காலத்தில் பிபிஇ கிட்கள், மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தோம். ஆனால், இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. மேட் இன் இந்தியா, கொரோனா தடுப்பூசி ஆகியவற்றில், மனித நேயத்தை காக்க இந்தியா தயாராக உள்ளது. கொரோனா ஒழிப்பில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
பயங்கரவாதம் என்ற சவாலை இந்தியா எதிர்கொண்ட போது, உலக நாடுகளும் தைரியத்துடன் அதனை எதிர்கொண்டன. ஊழலை ஒழிக்க தொழில்நுட்பம் பயன்படுகிறது. பல லட்சம் மற்றும் கோடிக்கணக்கான பணம், பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

ஏழை நாடுகளை உயர்த்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில், வளரும் நாடு முன்னெடுத்து செல்லும் என்பதை நிரூபித்துள்ளோம். இந்தியாவில், ஜனநாயகம் சாத்தியமில்லை. அது தகர்க்கப்படும் என சிலர் கூறினர். ஆனால் இன்று உண்மையில், துடிப்பான மற்றும் வலிமையான ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக இந்தியா உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE