வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக, டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டுவிட்டருக்கு மாற்றாக புதியதாக சொந்த தளத்தை உருவாக்க ஆராய்ந்து வருவதாக டிரம்ப், டுவிட்டர் தளத்திலேயே தெரிவித்துள்ளார். பின்னர் அதனை நீக்கினார்.
சமீபத்தில், நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், அவரது வெற்றியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். நேற்று முன்தினம், ஜோபைடன் வெற்றியை உறுதி செய்வதற்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் கூடியது. அப்போது, வாஷிங்டன்னில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், ‛கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் கட்டடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய வீடியோக்களை டிரம்ப் டுவிட்டரில் பதிவேற்றினார். அவை வேகமாக பரவியது. இதனையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக கூறி, அந்த வீடியோவை தங்களது பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. விதிகளை மீறியதற்காக டிரம்ப்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்ததாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.
தொடர்ந்து வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால், அவரின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனம் டிரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக நீக்கியுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டிரம்ப்பின் கணக்கை தீவிரமாக ஆய்வு செய்ததில், மேலும் வன்முறையை தூண்டும் அபாயம் உள்ளது. இதனால், அவரது கணக்கு நிரந்தரமாக நீக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
After close review of recent Tweets from the @realDonaldTrump account and the context around them we have permanently suspended the account due to the risk of further incitement of violence.https://t.co/CBpE1I6j8Y
— Twitter Safety (@TwitterSafety) January 8, 2021

இதனை தொடர்ந்து, அதிபருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில்(@potus) இருந்து டிரம்ப் வெளியிட்ட பதிவு: டுவிட்டர் நிறுவுனம் பேச்சு சுதந்திரத்தை தடை செய்கிறது. தன்னைபேசாமல் அமைதியாக இருக்க செய்வதற்காக தனது கணக்கை நீக்கியுள்ளது. டுவிட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கருத்துகளை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில், எதிர்காலத்தில், டுவிட்டருக்கு மாற்றாக சொந்த தளத்தை உருவாக்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறேன் என தெரிவித்திருந்தார். ஆனால், சில நிமிடங்களில் அந்த டுவீட்கள் நீக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE