சென்னை: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் ஸடாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ‛எல்காட்' டெண்டரில், பங்கேற்ற சீன நிறுவனம் ஒன்றுடன் நடந்த ஊழல் திருவிளையாடல் பேரதிர்ச்சி அளிக்கிறது. சீன நிறுவனம் இரு மாதிரிகளை அளித்து, அதன் சோதனை அறிக்கையையும் அளித்திருந்தது. ஒரு மாடல் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்கள். இன்னொரு மாடல் 265 மதிப்பெண்கள். ஒன்று தரம் குறைந்தது என்றாலும் இரண்டும் ஒரே விலை!
அதிமுக அரசு குறைந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிக்கு ஆர்டர் கொடுத்து, ஒரு மடிக்கணினிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் அடைந்த சட்டவிரோத லாபம் ரூ.469 கோடி. மெமரி 4 ஜி.பி.,யில் இருந்து 8 ஜி.பி.,யாக அதிகரிக்க வசதி இருக்க வேண்டும் என டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசதி இல்லை. மேற்கண்ட வசதியை பெற ரூ.2,500 மதிப்புள்ள புதிய ‛மதர்போர்டை' பயன்படுத்த வேண்டுமாம். அதிலும் அந்நிறுவனத்திற்கு ரூ.392 கோடி லாபம்.

ரூ.1,921 கோடி திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மகாபாதக மெகா ஊழல் இது. மொத்த நிதி ஒதுக்கீட்டில் 1,465 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. மாபெரும் ஊழலுக்கு வித்திட்டுள்ள முதல்வர் பழனிசாமி மீதமுள்ள ரூ.456 கோடி ரூபாயை நிறுத்தி வைத்து, எவ்வித தயக்கமும் இன்றி அந்நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் வைப்பதுடன், தரக்குறைவான மடிக்கணினி வழங்கியதற்காக பெருந்தொகையை அபராதமாக அந்த நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE