வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக, டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயம் டுவிட்டரில் டாப்பில் டிரெண்ட் ஆனது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கேபிட்டோலில் நடத்திய வன்முறை சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். டிரம்பிற்கு எதிராகவும் உலகம் முழுக்க கண்டன குரல்கள் எழுந்தன.
தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய வீடியோக்களை டிரம்ப் டுவிட்டரில் பதிவேற்றினார். அவை வேகமாக பரவியது. இதனையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாக கூறி, அந்த வீடியோவை தங்களது பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் உடனடியாக நீக்கியது. விதிகளை மீறியதற்காக டிரம்ப்பின் @realDonaldTrump பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதத்தில் டுவிட்டரை கையாள்வதால் அவரின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே ஒரு அதிபரின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவது இது தான் முதல் முறை.

இந்த விஷயம் சமூகவலைதளங்களிலும் எதிரொலித்தது. அதுவும் டுவிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் டுவிட்டரில் டிரெண்ட் ஆகாதா என்ன? #TrumpBanned என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் நம்பர் 1 இடத்தில் டிரெண்ட் ஆகிறது. பலரும் இந்த செயலை வரவேற்றுள்ளனர். அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கும் விழாவில் தான் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் அறிவித்திருப்பதன் மூலமே அவர் இன்னும் தேர்தல் விஷயத்தில் கோபமாக உள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அப்படி இருக்கையில் தனது ஆதரவாளர்களை வன்முறையை தூண்டு விதத்தில் டிரம்ப் பேசுவது முறையல்ல, டுவிட்டர் நிறுவனம் எடுத்த நடவடிக்கை சரியே என சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் அமெரிக்க மக்களுக்கு இன்று உண்மையான சுதந்திர தினம் என பதிவிட்டுள்ளனர். பலர் டிரம்ப்பை வைத்து வேடிக்கையான மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #TrumpBanned, #USPresident போன்ற ஹேஷ்டாக்குகள் டிரண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE