சத்தியமங்கலம்: தமிழக - கர்நாடக எல்லையில், சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட மூவர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் பிரிவு, கஸ்தூரி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 60. இவர் மனைவி அமராவதி, இவர்களது மகள் கோகிலா, 45, மற்றும் உறவினர்கள் என, 17 பேர் டெம்போ டிராவலர் வேனில், கர்நாடக மாநிலம், மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். திருப்பூரை சேர்ந்த டிரைவர் அருண் வேனை ஓட்டினார். தமிழக - கர்நாடகா எல்லையில், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள மூடள்ளி, சுவர்ணாவதி அணை அருகே நேற்று காலை, 5:00 மணியளவில் வேன் சென்றபோது, அங்குள்ள சாலை வளைவில் எதிரே லாரி வருவதை கண்டு வழிவிட ஒதுங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் வலதுபுற பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த சுப்பிரமணியன், அவர் மனைவி அமராவதி, மகள் கோகிலா ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிரைவர் உட்பட வேனில் இருந்த, 14 பேர் காயமடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், வேனில் இருந்தவர்களை மீட்டு, சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, ராமசமுத்திரா போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE