கரூர்: கரூர் கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில், நேற்று கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி கொரோனா வைரஸ் தடுப்பூசி, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதில், சுகாதார பணியாளர்கள் மற்றும் தனியார் மருத்துவ பணியாளர்களுக்கு செலுத்தும் வகையில், கரூர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 48 அரசு மருத்துவமனைகள், 405 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என மாவட்டத்தில், 6,000 பேரின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு அரசு மருத்துவமனை, ஒரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைகளில் தலா, 25 பேருக்கு தடுப்பூசி போடுவது குறித்த ஒத்திகை நேற்று நடந்தது. கரூர் நகராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதியில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை, 25 பணியாளர்களுக்கு நடத்தப்பட்டது. மாவட்ட கொள்ளை நோய் நிபுணர் ரகோத்தமன், தாய் சேய் நல அலுவலர் பியூலா, கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி மருத்துவர் நித்யா உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE