கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால், அமராவதி அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, இரண்டு நாட்களாக மழை பெய்யவில்லை. நேற்று மதியம், 2:00 மணியளவில் கரூர் நகரம், பசுபதிபாளையம், வாங்கல், வெள்ளியணை, தான்தோன்றிமலை, காந்தி கிராம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை மயிலம்பட்டியில், 3 மி.மீ., மழை பெய்தது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் செல்கிறது. கரூர் அருகே செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு நேற்று காலை, 4:00 மணிவரை வினாடிக்கு, 2,500 கன அடி தண்ணீர் வந்ததால், ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 1,048 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஆற்றில், 783 கன அடி, புதிய பாசன வாய்க்காலில், 33 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 89.21 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 2 மி.மீ., மழை பெய்தது.
* மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, 3,371 கன அடி தண்ணீர் வந்தது. டெல்டா பாசன பகுதிகளுக்கு காவிரியாற்றில், 2,851 கன அடி தண்ணீரும், மூன்று பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிரவரப்படி, 19 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.17 அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், இன்று அல்லது நாளை அணை நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE