நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை, சென்னை உ.வே.சாமிநாதைய்யர் நூல் நிலையம் சார்பில், 'சுவடியியல் பதிப்பும் தொகுப்பும்' என்ற, இணையவழி பயிலரங்கம், ஐந்து நாட்கள் நடந்தது.
நிறைவு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். சென்னை இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், சாமிநாதைய்யர் நூல் நிலைய செயலாளருமான சத்தியமூர்த்தி பேசியதாவது: தமிழரின் பாரம்பரியத்தை மீட்டு வந்ததில், ஓலைச்சுவடிகளின் பங்கு மகத்தானது. கல்வெட்டுகள் வட்டெழுத்தால் எழுதப்பட்டன. ஓலைச்சுவடிகளை படிப்பதற்கு மாணவர்கள் பயிற்சி பெற வேண்டும். உலகம் முழுவதும், தமிழ் ஓலைச்சுவடிகள் காணக்கிடக்கின்றன. ஆனால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு வருவதில், சிறந்த அறிஞர் பற்றாக்குறை இருக்கிறது. நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. இந்திய மொழிகளிலேயே, அதிகமான ஓலைச்சுவடிகள் கொண்டது தமிழ் மொழியில்தான். இவ்வாறு, அவர் பேசினார்.
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப்பேராசிரியர் தாமரைப்பாண்டியன், 'தமிழ்ச் சுவடிகள்' என்ற தலைப்பில் பேசியதாவது: 150 ஆண்டுகள் வரை, மக்களிடம் ஓலைச்சுவடிகள் பல தலைமுறைகளாக இருந்துள்ளன. சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் பல இருந்துள்ளன. தமிழர்கள், தான் கண்டதை, கேட்டதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல ஓலைச்சுவடிகளை பயன்படுத்தினர். ஓலையின் மேல் பதம் அறிய, 'உ' என்று எழுதி சோதனை செய்தனர். அதுவே, பிற்காலத்தில், பிள்ளையார் சுழி என்றாகி விட்டது. இவ்வாறு, அவர் பேசினார். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE