நாமக்கல்: அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், மின் திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களிடம், 6.13 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து, நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், கோவை அமலாக்க கோட்டத்தின் கோவை வடக்கு, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி அமலாக்க அதிகாரிகள், பட்டணம், எலச்சிபாளையம், ராசிபுரம், ஊரகம், தெற்கு, வையப்பமலை-மேற்கு, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 10 மின் திருட்டுக்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, ஆறு லட்சத்து, 12 ஆயிரத்து, 926 ரூபாய் இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கை தவிர்க்க முன்வந்தனர். அவர்களிடமிருந்து சமரசத் தொகையாக, 97 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. அவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. மின் திருட்டு தொடர்பான தகவல்களை, செயற்பொறியாளரிடம், 9443049456 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE