நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அடுத்த வாழ்நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (எ) விஜயகுமார், 30; கூலி தொழிலாளி. கடந்த, 6ல், ரத்த காயங்களுடன், இறந்து கிடந்தார். நல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், வெள்ளையனின் தாயார் ராணி, 50, அவருடன் தொடர்பு வைத்திருந்த, அதே பகுதியை சேர்ந்த சவர தொழிலாளி சுப்ரமணி, 46, தலைமறைவாகினர். அவர்களை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று காலை, நல்லூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், மணியனூர் பிரிவு சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மொபட்டில் வந்த சுப்ரமணியை கைது செய்தனர். விசாரணையில், வெள்ளையனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து, அவர் அளித்த வாக்குமூலம்: கடந்த, 5ல், பொங்கல் பரிசு, 2,500 ரூபாய் வாங்கி வந்த ராணி, அவரது மகனுக்கு, 500 ரூபாய், எனக்கு, 200 ரூபாய் தந்தார். அன்று இரவு, போதையில் எனக்கும் வெள்ளையனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, என் மொபைல் போனை, பிடுங்கிக் கொண்டு, வெள்ளையன் சென்றார். ஆத்திரமடைந்த நான், கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தேன். 'என் மகன் எங்கே' என, ராணி கேட்டதற்கு, கொலை செய்துவிட்டேன் என தெரிவித்தேன். சம்பவ இடத்துக்கு சென்று, வெள்ளையனை, அருகில் உள்ள பிளாட்டில் வீசி விட்டு, இருவரும் தலைமறைவானோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, விசாரணை நடத்தி வரும் போலீசார், ராணியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE