ஜகார்த்தா:ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம், திடீரென மாயமானது. அதில் இருந்த, 56 பயணியர் உட்பட, 62 பேரின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 'ஸ்ரீவிஜயா ஏர்' என்ற விமான நிறுவனம், உள்நாடு மற்றும் சர்வதேச சேவைகள் வழங்கி வருகிறது. இந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமான, 'போயிங் 737' விமானம், ஜகார்த்தாவில் இருந்து, நாட்டின் மேற்கு காலிமாண்டன் மாகாணத்தில் உள்ள போன்டியானக்குக்கு, நேற்று மதியம் புறப்பட்டது. இந்த விமானம், 90 நிமிடத்தில் போண்டியானக்கை அடைய வேண்டும்.
ஆனால், விமானம் புறப்பட்ட, 44 நிமிடங்களில், அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.இந்த விமானத்தில், 56 பயணியர் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்தனர். திடீரென மாயமான விமானத்தை தேடும் பணியில், மீட்புப் பணிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்தோனேஷியாவின் வடக்கே உள்ள ஆயிரம் தீவுகள் பகுதியில், கடலில் சில உலோகப் பொருட்கள் இருப்பதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தேடுதல் பணி நடந்து வருகிறது.இதற்கு முன், இந்தோனேஷிய கடல் பகுதிகளில், பல விபத்துகள் நடந்துள்ளன. கடந்த, 1997ல், 'கருடா' விமான நிறுவனத்தின் விமானம், சுமத்ரா தீவுகள் பகுதி கடலில் விழுந்து, 234 பேர் உயிரிழந்தனர். கடந்த, 2014, டிசம்பரில், 'ஏர் ஏசியா' விமான நிறுவனத்தின் விமானம், கடலில் விழுந்ததில், 162 பேர் உயிரிழந்தனர்.கடந்த, 2018, அக்டோபரில், 'லயன் ஏர்' விமான நிறுவனம், ஜாவா கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், 189 பேர் உயிரிழந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE