பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும் அனைத்து கார்டுதாரர்களுக்கும், தலா, 2,500 ரூபாயை, தமிழக அரசு, பொங்கல் பரிசாக கொடுத்து வருகிறது. அந்த பணத்துடன் வேஷ்டி, சேலை, முழு கரும்பு, சர்க்கரையும் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, முதல்வர் பழனிசாமி., கூறும் போது, 'கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சற்று சிரமத்தை குறைக்கும் வகையில், அரசு இந்த பணத்தை, சற்று உயர்த்தி வழங்கி வருகிறது; இதில், அரசியல் நோக்கம் எதுவும் இல்லை' என்கிறார்.அதன்படி, தமிழகம் முழுதும், இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர், பொங்கல் பணம் மற்றும் பொருட்களை, ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர். அதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை, அவர்களு க்கு எவ்வித பண கஷ்டமும் இன்றி நடந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. தீபாவளி பண்டிகைக்காவது, புத்தாடைகள் எடுக்க வேண்டும்; விதவிதமான பலகாரங்கள் செய்ய வேண்டும் என சில, பணத்தை விழுங்கும் அம்சங்கள் நிறைய உள்ளன. ஆனால், பொங்கல் பண்டிகை மிக எளிமையான பண்டிகை.
போதுமான பணம்
தமிழர்கள் வாழ்வுடன் இணைந்த இந்த பண்டிகையை, எப்படி கொண்டாடினாலும், எளிமையாகத் தான் கொண்டாட முடியும். ஒரு பொங்கல் பானை; அதில் சிறிது அரிசி; இனிப்பு சேர்க்க சர்க்கரை, சிறிது காய்கறிகள், கரும்புத்துண்டு என, பொங்கல் பண்டிகையை முடித்து விடலாம். அந்த பண்டிகைக்கு, தமிழக அரசு வழங்கியுள்ள, 2,500 ரூபாய் தாராளம் என்றே சொல்ல வேண்டும். அதிலும், நடுத்தரத்திற்கு சற்று கீழே உள்ள மக்களுக்கு, இது, போதுமான பணம் என்றே சொல்லலாம்.
பொங்கலுக்கு, 'படி' எனப்படும், பணத்தை பரிசாக வழங்குவது, காலம் காலமாக, நம் முன்னோர் செய்து வந்த மரபு. வீட்டில் உள்ள பெரியவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு பணமாக கொடுப்பதை, பொங்கல் படி என்பர். இன்னமும், தமிழ் குடும்பங்களில், பொங்கலன்று, பொங்கல் படி வழங்கப்படுவது, வழக்கமாக உள்ளது.
அது, 5 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை கூட இருக்கலாம்.அதுவே, மணம் முடித்த பெண்களுக்கு, பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்படும் பொங்கல் பரிசு, பொங்கல் படியாக மாறி, இப்போது வரை தமிழர்கள் வீடுகளில், மகிழ்ச்சியாக வழங்கப்படுகிறது.தமிழர்களின் இந்த மகிழ்ச்சியான விழாவில் பங்கேற்றுள்ள தமிழக அரசும், முதலில், 100 ரூபாயை, பொங்கல் பரிசாக, சில ஆண்டுகளுக்கு முன், அரசு ஊழியர்களுக்கு வழங்கியது. அதன் பிறகு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூடுதலாக சில கிலோ அரிசியும், சற்று கூடுதலாக சர்க்கரையும் வழங்கப்பட்டன.
அதுவே, அரசுகள் மாற மாற, பொங்கல் பரிசுத் தொகை, 500 ரூபாயானது, 1,000 ரூபாயானது; இந்த முறை, 2,500 ரூபாயாக மாறியுள்ளது. அடுத்த நான்கைந்து மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், தமிழக அரசு வழங்கி வரும், 2,500 ரூபாய்க்கு, தேர்தல் சாயம் பூசப்பட்டு உள்ளது. இது, அந்த பரிசை ஆர்வமாக வாங்குவோருக்கு மன வருத்தத்தை அளிக்கிறது.
கொரோனா என்ற கொடும் பூதத்தின் தாக்கத்தால், மாநிலத்தில், அனைத்து தரப்பினரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்களுக்கு சற்றே நிவாரணம் வழங்கும் வகையில், இந்த, 2,500 ரூபாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கடும் விவாதம்
இந்த தொகையை வழங்கலாமா, வழங்கக் கூடாதா என்பதில், அரசியல் கட்சிகளுக்கு இடையே அறிக்கை போர் மற்றும் பிரசாரங்களில் கடும் விவாதம் நடந்து வருகிறது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒரு படி மேலே போய், 'ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 2,500 ரூபாய் கொடுப்பதற்குப் பதில், 5,000 ரூபாய் கொடுங்கள்' என்கிறார். அதே நேரத்தில், தேர்தல் நேரத்தில் வழங்கப் படுவதால், இது, தேர்தலுக்கான மறைமுக கையூட்டு என, அவர் சொல்ல தவறுவதில்லை.
வழக்கமாக, இதுபோன்ற பரிசுத் திட்டங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களை நாடி, தடை பெறும், தி.மு.க., இந்த முறை, அவ்வாறு சட்ட நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் ஓட்டுகளை, வரும் சட்டசபை தேர்தலில் இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், அ.தி.மு.க.,வை வசைபாடி விட்டு, ஸ்டாலின் சென்று விடுகிறார். எனினும், அ.தி.மு.க., அரசு வழங்கி வரும், 2,500 ரூபாய், தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்பதில், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அதனால் தான், ஒவ்வொரு ரேஷன் கடை வாசலிலும், அந்தந்த பகுதி, அ.தி.மு.க.,வினர், 'இங்கு தான், பொங்கல் பரிசு, 2,500 ரூபாய் வழங்கப்படுகிறது' என்பதை உணர்த்தும் வகையில், போர்டுகளை வைத்துள்ளனர்.அந்த போர்டுகளில், அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஜெ., படம், இப்போதைய முதல்வர், இ.பி.எஸ்., படங்கள் பெரியதாக உள்ளன. அதன் கீழ், அந்த பகுதி, அ.தி.மு.க., நிர்வாகிகள் படங்களும் இடம்பெறுகின்றன.இந்த படங்களைப் பார்த்து, யாரும், ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில்லை என்பதும், வாங்கிய பணம் மற்றும் பொருட்களுக்காக, வெளியே வைக்கப்பட்டு உள்ள போர்டுகளுக்கு முன் நின்று, நன்றி தெரிவிப்பதுமில்லை.
எனினும், 'எங்களால் தான், இந்தப் பணம் வழங்கப்படுகிறது. நாங்கள், ஏழைகளின் காவலர்கள்' என்பதை உணர்த்த, ஆளும், அ.தி.மு.க.,வினர் முற்படுகின்றனர்.எனினும், மக்களுக்கு தெரியும், யார் ஏழைகளின் காவலர்கள் என்று!அ.தி.மு.க.,வினரை அப்படியே விட்டால் சரிபட்டு வர மாட்டார்கள் என கருதும், தி.மு.க.,வினரும், சில ரேஷன் கடைகள் முன், போர்டுகளை வைத்துள்ளனர். அந்த பகுதியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., தான் என்றால், அந்த மிகப் பெரிய போர்டில், தி.மு.க., தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்கள் தவறாமல் இருக்கின்றன.
தேர்தல் லாபம்
இன்னும் சில இடங்களில், 'நன்றி, தி.மு.க.,' என்ற போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.இப்படி, 2,500 ரூபாயை, இந்த இரு பெரும் கட்சிகளும், தேர்தல் லாபத்திற்கு பயன்படுத்தப் பார்க்கின்றன. ஆனால், அந்த, 2,500 ரூபாய், பொங்கல் செலவுக்கு போதுமானதாக இருக்கும் என்ற எண்ணத்தில், பெரும்பாலான மக்கள், மகிழ்ச்சியாக பெற்றுச் செல்கின்றனர்.அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராமல், 'இடர்பாடான நேரத்தில், அரசு வழங்க வேண்டிய தொகை தான் இது' என கருதி, அ.தி.மு.க., அரசுக்கு, மனதார நன்றியும் தெரிவிக்கின்றனர்.
அதற்காக, அவர்கள் அனைவரும், அ.தி.மு.க.,வுக்குத் தான் ஓட்டளிப்பர் என சொல்வதும், அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு.ஏனெனில், அ.தி.மு.க.,வின் சொந்த பணத்திலிருந்து, இந்த, 2,500 ரூபாய் வழங்கப்படவில்லை; அரசின் பணம் தான்; பொங்கலுக்காக வழங்கப்படுகிறது என்பதில், மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
அவசியம் இல்லை
எனினும், இந்த, 2,500 ரூபாயையும், பொங்கல் பரிசையும், ரேஷன் கடைகளுக்கு சென்று பெறுவதில், நடுநிலையாளர்கள் பலருக்கும் ஒரு வித தயக்கமும், ஒருவித தவிப்பும் இருப்பதை காண முடிந்தது. அது, அவசியம் இல்லை.இந்தந்த பகுதியினருக்கு, இந்த ரேஷன் கடைகளில், இன்ன நேரத்தில், பொருட்கள், பணம் வழங்கப்படுகிறது என, வீடு, வீடாக, 'டோக்கன்' வினியோகிக்கப்பட்டது. அதிலும், அரசியல் செய்ய முயன்ற, தி.மு.க., 'டோக்கனில், அ.தி.மு.க., தலைவர்கள் படம், பெயர் உள்ளது' என்றது. 'அதுபோலத் தான், முந்தைய, தி.மு.க., ஆட்சியிலும் வழங்கப்பட்டது' என, ஆளும் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டதும், அவர்கள் கப்சிப் ஆகினர்.
பொங்கலுக்கான ரேஷன் பொருட்களுடன் பணத்தை பெற, ரேஷன் கடைகளை அணுகிய பலருக்கும், அது புதிய அனுபவமாகவே இருந்தது. வழக்கமாக, அரிசி ரேஷன் கார்டுகளை வைத்திருக்கும் பெரும்பாலானோர், அந்த கார்டுகளை, பக்கத்து வீட்டினர் மற்றும் தெரிந்தவர்களிடம் கொடுத்து தான், இதுவரை பொருட்களை பெற்று வந்தனர்.இப்போது அவர்களே நேராக, கடைகளுக்கு செல்ல வேண்டியது அவசியம் என்பதால், கடைகளை தேடி அலைந்ததை காண முடிந்தது.
தெளிவான முகவரி இருந்தும், கடைகளை தேடி, பலரும் தங்கள் மனைவி அல்லது குழந்தைகளுடன் சென்றதை காண முடிந்தது.அதுபோல, வரிசையில் நிற்பதற்கு தயக்கம்; வாங்கிய பொருட்களை வகையாக பைகளில் வாங்குவதில் சிக்கல்; நீள கரும்பை அப்படியே வாங்கிச் செல்வதில் வெட்கம் என, பல வித உணர்வுகளை வெளிப்படுத்தினர்.ஆனால், வழக்கமாக, ரேஷன் கடைகளுக்கு சென்று, பொருட்களை வாங்கி, சமையல் செய்து பழகியவர்களுக்கு, இந்த புதிய பரிசு, கூடுதல் மகிழ்ச்சியை அளித்ததையும் பார்க்க முடிந்தது.
இந்த நேரத்தில், இதுபோன்ற பரிசு பொருட்கள் வழங்கலாமா என்ற விவாதம், ஊடகங்களில் பெரிதாக வலம் வரத் துவங்கியதையும் காண முடிந்தது.நம் நாட்டில் பெரும்பாலானோர் ஏழைகள் தான். அரசின் பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் மக்களின் எண்ணிக்கை இங்கு அதிகம். ஒன்றிரண்டு ரூபாய், கட்டணங்கள் குறைந்தாலும், விலைவாசி வீழ்ந்தாலும், மகிழ்ச்சி அடையும் ஜனங்கள் இங்கு அதிகம்.
மேலும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற, சமதர்ம சமுதாயத்தை படைக்க வேண்டும் என்பது தான், அரசுகளின் குறிக்கோள் என்பதால், இலவசமாக வழங்கப்படும் பரிசு பொருட்கள், இப்போதைய கால கட்டத்தில் அவசியம் என்பதே என் கருத்து.அதுவும், கொரோனா காலத்தில், இதுபோன்ற அறிவிப்புகளும், வெகுமதிகளும், மக்களின் சிரமத்தை கொஞ்சமாவது குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அரசு வேலை பார்ப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் இருப்பவர்கள், சொந்தமாக தொழில் செய்பவர்கள், பெரும் பணக்காரர்கள் என எல்லாரும் சலுகைகளையும், வெகுமதிகளையும், பாராட்டுகளையும் விரும்புபவர்கள் தான்.
பெறுவதும் தவறில்லை
கிடைக்கும் வருவாய் அல்லது சம்பளத்தில், கொரோனாவுக்காக, சில நுாறு ரூபாயை கூடுதலாக கொடுத்தால், மகிழாதவர்கள் யாரும் இருப்பரா...அதுபோல, கொரோனாவால், சில வரிகள், கட்டணங்கள் தள்ளுபடியானது, தள்ளி வைக்கப்பட்டதால், நிம்மதியாக உணர்ந்தவர்கள் தான் நாம்.
அதனால், கொரோனா பாதிப்பு இருக்கும் இந்த நேரத்தில் வழங்கப்படும் பரிசு பொருட்களும், பரிசுத் தொகையும், அதன் பாதிப்பையும், செலவினத்தையும் சற்று குறைக்கத் தான் செய்யும்.அதற்காக பரிசுப் பொருட்களையும், பரிசுத் தொகைகளையும் தொடர்ந்து வழங்க, அரசு கஜானாவிலும் பணம் இருக்காது; அவ்வாறு எந்த அரசும் வழங்காது; அவ்வாறு தொடர்ந்து பெறுவதும் தவறு என்பதும், மக்களுக்கு நன்கு தெரியும்.அதனால், பொங்கல் பரிசுத் தொகையை வழங்குவதும் தவறில்லை; அதை பெறுவதும் தவறில்லை. அதே நேரத்தில்,நாட்டுக்கு நியாயமாகவும், நாட்டின் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு, உண்மையாக உழைத்து, நாமும் மேம்பட வேண்டும்; நாட்டையும் மேம்படுத்த வேண்டும் என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, இந்த, 2,500 ரூபாயில், அரசியல் செய்வதை, அரசியல் கட்சிகளும் கைவிட வேண்டும்; அதை வாங்க, பொதுமக்களும் தயக்கம் காட்டவும் கூடாது. இலவசங்களும், பரிசுகளும் ஊக்கம் அளிப்பவையே தவிர, ஊழல் அல்ல!
எஸ்.நல்லுாரான்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:இ - மெயில்: snalluraan@yahoo.com