புதுடில்லி:'வரும், 16ம் தேதி முதல், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக, மூன்று கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, கொரோனாவுக்கு எதிரான, 'கோவிஷீல்ட்' தடுப்பூசி தயாரிக்கும் பணியை, மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம், நம் நாட்டில் மேற்கொள்கிறது.தெலுங்கானா தலைநகர் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுக்கும், மத்திய அரசு சமீபத்தில் அவசரகாலத்தில் பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தது.
முன்னுரிமை
இந்த இரண்டு தடுப்பூசிகளையும், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்து வருகிறது.இந்நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தடுப்பூசி தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையில், உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம், டில்லியில் நடந்தது. இதில், மத்திய அமைச்சரவைச் செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் உட்பட, உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலர் கூறியதாவது :தடுப்பூசி வினியோகத்தை துவக்குவதற்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன், மத்திய சுகாதாரத்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது. மக்கள் பங்கேற்பு, தேர்தல் கால அனுபவத்தை பயன்படுத்துதல் மற்றும் நாடு தழுவிய தடுப்பு மருந்து திட்டம் ஆகியவற்றின் கோட்பாடுகளை சார்ந்து, தடுப்பூசியை வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதாரச் சே வைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தொழில்நுட்பத்தின் உதவியுடன், தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்.நாடு முழுதும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மூன்று கோடி பேருக்கு, தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பின், 50 வயதுக்கு மேற்பட்டோர், 50 வயதிற்கு குறைவாக உள்ளோரில், நோயுற்ற தன்மை உடையோர் என, 27 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும்.கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்காக, பிரத்யேக, 'டிஜிட்டல்' தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒத்திகை
இதில், தடுப்பூசிகள் இருப்பு நிலவரம், அவற்றின் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி பயனாளிகளை கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்ட மேலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இந்த மென்பொருள் வழங்கும். 79 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள், இந்த தளத்தில் தங்களை பதிவு செய்துள்ளனர்.தடுப்பூசி செலுத்துவோர் மற்றும் நிர்வகிப்போர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிப்பதால், அவர்களுக்கு, இது குறித்து தீவிர பயிற்சியளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில், 2,360 பேர் பங்கேற்றனர். 61 ஆயிரத்துக்கும் அதிகமான திட்ட மேலாளர்கள், தடுப்பு மருந்து வழங்கும் இரண்டு லட்சம் பேர், இதர தடுப்பு மருந்து குழு உறுப்பினர்கள், 3.7 லட்சம் பேருக்கு, மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி வழங்குதல் தொடர்பாக, நாடு முழுதும் மூன்று கட்டங்களாக ஒத்திகை நடத்தப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
இதன்பின், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை எப்போது துவக்கலாம் என, கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அடுத்த வாரம், லோஹ்ரி, மஹர சங்கராந்தி, பொங்கல், மக் பிஹு ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. அதனால், இந்த பண்டிகைகள் முடிந்த பின், தடுப்பூசி வழங்கும் பணியை, வரும், 16ல் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மனித குலத்தை காப்பாற்ற இந்தியா தயார்'
வெளிநாடு வாழ் இந்தியர்களின், 16வது மாநாட்டை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி, நேற்று துவக்கி வைத்தார்; அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது, பலரும் பலவிதமாகப் பேசினர். இந்தியாவின் பொருளாதார நிலையையும், மக்களின் கல்வியறிவு நிலையையும் குறிப்பிட்டு, 'இந்தியா சிதைந்துவிடும்' என்றனர்.
இந்திய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, தேசத்தின் எதிர்காலம் பற்றிய குறைந்த மதிப்பீடுகள் அனைத்தும், பொய்யாகிவிட்டது புரியும். இந்தியா இன்று, வலுவான, துடிப்பான ஜனநாயக நாடாக உள்ளது. ஊழலை ஒழிக்க, தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துகிறோம். ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள், நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப் படுகிறது.கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியாவின் திறன் வெளிப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில், மிகக் குறைந்த இறப்பு விகிதம் மற்றும் அதிக குணமடையும் விகிதம் உடைய நாடுகளில் ஒன்றாக, இந்தியா உள்ளது. உலகின் மருந்தகமாக இருக்கும் இந்தியா, கடந்த காலத்தில், அனைத்து நாடுகளுக்கும் முக்கியமான மருந்துகளை வழங்கி உதவியுள்ளது. மனித குலத்தின் பாதுகாப்பிற்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுடன், கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட, இந்தியா தயாராக உள்ளது.
உலக நாடுகள் தடுப்பூசிகளுக்காக காத்திருப்பது மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை, இந்தியா எவ்வாறு நடத்துகிறது என்பதையும் கவனித்து வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தபடி, நாம் இணையதளம் வழியே, இன்று தொடர்பில் இருந்து வருகிறோம். ஆனால், நம் மனது, எப்பொழுதும் பாரத மாதாவுடன் இணைந்து உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், இந்த மாநாட்டில் பேசினார். 'தற்சார்பு இந்தியாவுக்கான பங்களிப்பு' என்பதே, இந்த மாநாட்டின் முக்கிய கருத்து என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE