புதுடில்லி: டில்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை உடனடியாக கலைக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, விவசாயி களை சமரசம் செய்யும் முயற்சிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. எனினும், இதுவரை விவசாய சங்க பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நடத்திய எட்டு கட்ட பேச்சுகளும், தோல்வியில் முடிந்தன.
'சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், குடியரசு தினத்தன்று, டில்லியை நோக்கி, டிராக்டர் பேரணி நடத்தப்படும்' என, விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.இதற்கிடையே, எல்லையில் போராடும் விவசாயிகளை கலைக்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், ரிஷப் சர்மா என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இதில் புதிய பிரமாண பத்திரம் ஒன்றை, ரிஷப் சர்மா நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ள தாவது:டில்லி எல்லை பகுதியில், பிரதான சாலைகளை முடக்கி, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயி களை, உடனடியாக கலைக்க, உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அந்த பகுதிகள் வழியாக செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு, இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஷாஹீன் பாக் வழக்கில், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டது விதிமீறல் என, தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே, விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், அந்த தீர்ப்புக்கு முரணாக அமைந்துவிடும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவு: சோனியா ஆலோசனை
டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து, காங்., தலைவர் சோனியா, நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த ஆலோசனையில், காங்., மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். ராகுல் இதில் பங்கேற்கவில்லை. காங்., பொதுச் செயலர் பிரியங்கா, இதில் பங்கேற்றார்.
இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: விவசாயிகள் போராட்டத்தில், காங்கிரஸ் இதுவரை நேரடியாக பங்கேற்கவில்லை. பிரச்னை அரசியல் ஆகிவிடுமென கருதியே, இந்த நிலைப்பாட்டில் இருந்து வந்தது. தற்போது சூழ்நிலை மாறி, முற்றிலும் தீவிரம் அடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்றாலும், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில், பல ஊர்களில், அசாதாரணமான சூழல் நிலவுகிறது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக காங்கிரஸ் கருதுகிறது. இதையடுத்து, நாடு முழுதும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, களத்தில் இறங்கி போராட்டம் நடத்த, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE