சென்னை: முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்த, அ.தி.மு.க.,ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ்.,சுக்கு, கோடான கோடி நன்றி தெரிவிப்பதாக, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். பொதுக்குழுவில் தன்னை அங்கீகரித்ததால், மகிழ்ச்சி பொங்க உரையும் நிகழ்த்தினார்.
சென்னையில் நேற்று, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போன்ற ஆளுமை உள்ளவன் அல்ல நான்; ஆனால், அ.தி.மு.க., கொடுத்த கடமையை செய்து முடித்துள்ளேன்.என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை, வீண் போகவில்லை.இனி வரும் காலங்களிலும், தமிழகத்திற்கும், கட்சிக்கும் வேகமாக தொண்டாற்றுவேன்.அடுத்த ஆட்சியில், இன்னும், 100 ஆண்டுகளுக்கு, அ.தி.மு.க., ஆட்சி தொடர அடித்தளம் இடுவேன். கட்சி தொண்டர்கள் அனைவரும் ஒன்று பட்டு தேர்தல் பணியாற்றினால் தான், வெற்றி பெற முடியும்.
அ.தி.மு.க.,வை தந்திரத்தாலோ, சூழ்ச்சியாலோ வீழ்த்த முடியாது. வெற்றி எங்கள் சொந்தம்; வீரம் எங்கள் சொத்து. மூன்று மாதங்கள், தலைமை அறிவிப்புக்கு இணங்க, அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும்.இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, பூத் கமிட்டி தொடர்ச்சி 5ம் பக்கம்ஆகியவற்றை முழுமையாக அமைக்க வேண்டும். இது தேர்தலுக்கு அடிப்படை தேவை. இதை முழுமையாக நிறைவேற்றி விட்டால், 100 சதவீதம் வெற்றி நமக்கே.
திட்டம் போட்டு தேர்தலை சந்தித்தால், வெற்றி உறுதி. தேர்தல் வியூகத்தை சரியாக அமைத்து விட்டால், நம் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. அரசு திட்டங்கள் அச்சிட்ட நோட்டீஸ்களை, வீடு வீடாக வழங்க வேண்டும்.போகும் இடம் எல்லாம், ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்; பொய் கூறி, ஆட்சி மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அதை முறியடிக்க வேண்டும்.
தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், 13 பேர் மீது, ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. அதை மறைக்க, ஸ்டாலின் நம் மீது பழி சுமத்துகிறார்.காவிரி -- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற, டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில், பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். காவிரி -- கோதாவரி நதிகளை இணைக்க, முயற்சி எடுத்து வருகிறோம்.அனைத்து துறைகளிலும், தொடர்ந்து விருதுகளை பெற்று வருகிறோம். திறமை மிக்க அரசு என்பதற்கு, இதுதான் சான்று.
இந்தியாவிலே முதல் மாநிலம் என்ற பெயரை பெற்றுள்ளோம்.பெண் குலத்தை இழிவுப் படுத்தும் வகையில், உதயநிதி பேசி உள்ளார். அவர் பிஞ்சில் பழுத்து விட்டார். வளர்ப்பு அப்படி; விதை ஒன்று போட்டால், சுரை ஒன்றா முளைக்கும்.அனைத்து மாவட்டங்களிலும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கொண்டாடினோம். ஜெ.,க்கு பெருமை சேர்க்கும் வகையில், மெரினா கடற்கரையில், 80 கோடி ரூபாயில், ஆலயம் அமைத்துள்ளோம். இன்னும், 30 நாளில் திறக்க உள்ளோம். இதில், அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்.
எனக்கு முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம், எங்கள் பின்னால் நிற்கின்றனர். அவர்களை வணங்கி, அவர்கள் ஆசியுடன் வெற்றி பெறுவோம். வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், மிகப்பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைப்போம். உழைப்பு, ஒற்றுமை இருந்தால், வெற்றி நிச்சயம். நம்மிடம் உள்ள மன மாட்சரியங்களை துார எறிந்து, வெற்றி பெறுவோம். என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சுக்கு கோடான கோடி நன்றி. என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த, அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. அதற்கு ஒப்புதல் அளித்த, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. இவ்வாறு, அவர் பேசினார்.
கொரோனாவை விட தி.மு.க., மோசமான வைரஸ்: ஓ.பி.எஸ்.,
அ.தி.மு.க., பொதுக்குழுவில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது:கொரோனாவை விட மோசமான வைரசாக திகழும் தி.மு.க.,வை, அரசியலை விட்டு விரட்டி அடிக்கும் ஆண்டாக, 2021 திகழப் போகிறது. மக்களின் மகத்தான ஆதரவோடு, ஜெ., அரசு மூன்றாவது முறையாக, ஆட்சி அமைக்க உள்ளது.இந்த ஆண்டு தமிழகத்தில், புரட்சியை உருவாக்கும். சட்டசபை தேர்தலில், வெற்றி காணும் திறம் நம்மிடம் உள்ளது. ஜெ., அரசு தான், மீண்டும் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்று நினைக்கும், தமிழக மக்கள் ஆதரவு நமக்கு உள்ளது.
மக்களிடம் செல்லுங்கள்; தமிழகத்திற்கு தி.மு.க., செய்த துரோகங்களை, ஊழல்களை சொல்லுங்கள். கச்சத் தீவை தாரை வார்த்தது; காவிரி வழக்கை தன்னிச்சையாக வாபஸ் பெற்றது; ஜல்லிக்கட்டு நடக்காமல் இருக்க காரணமாக இருந்தது; 'நீட்' தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது; ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது என, தி.மு.க., செய்த துரோகங்களை எடுத்துரையுங்கள். தற்போது, நல்லவர் போல வேடமிடும், அவர்களின் கபடவேடத்தை தோலுரித்து காட்டுங்கள்.ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அ.தி.மு.க., தான். வேறுபாடுகளை புறந்தள்ளி, ஒற்றுமையாக நாம் உழைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசின் நல் உறவால், அரசு செயல்படுத்திய திட்டங்களை, மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.நம் கட்சிக்கு எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலையை, சட்டசபை தேர்தலில் உருவாக்குவோம். வரும் சட்டசபை தேர்தலில், நாம் அடையப்போகும் வெற்றி, மகத்தான வெற்றியாக, தமிழக அரசியல் வரலாற்றில், எந்த இயக்கமும் அடையாத வெற்றியை, அ.தி.மு.க., அடைந்தது என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
அ.தி.மு.க., பொதுக்குழு துளிகள்
போக்குவரத்து நெரிசல்
*அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு கார்கள், பஸ்களில் வந்த நிர்வாகிகளால், கோயம்பேடு முதல் திருவேற்காடு வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்துார் - புழல் இடையிலான சென்னை பைபாஸ் சாலையில், சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ஒன்பது மணி நேரத்திற்கு மேலாக, சரக்கு வாகன டிரைவர்கள் அவதிக்குள்ளாயினர்.
செங்கோல், வீர வாள்
* பொதுக்குழுவில் பங்கேற்ற முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு செங்கோலையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு வீர வாளையும், எம்.ஜி.ஆர்., இளைஞரணி இணை செயலர் டாக்டர் சுனில் உள்ளிட்டோர் வழங்கினர். திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பிரமாண்ட மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசும் வழங்கப்பட்டது
* கொரோனா காலம் என்பதால், இந்த பொதுக்குழு கூட்டத்தை காண, தொண்டர்கள் அதிகம் வரவில்லை. இதனால், ஜெ., - எம்.ஜி.ஆர்., போட்டோக்கள், கார்களில் மாட்டும் கட்சி கொடிகள், பேட்ஜ்கள் விற்பனை செய்ய வந்த வர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
* உள் அரங்கில் நடக்கும் கூட்டங்களில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், 50 சதவீத இருக்கைகளில் அனுமதி உள்ளிட்டவற்றை பின்பற்ற, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுக்குழுவில் சமூக இடைவெளியின்றி மாநில நிர்வாகிகள் முதல் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். இதில், பலரும் முக கவசம் அணியாமல் விதியை மீறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE