கோவை:'கொரோனா' தொற்று பரவலுக்கு இடையே, கோவை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில், கடந்த, ஒன்பது மாதங்களில், 507 பிரசவம் நடந்துள்ளது.கோவை மாநகராட்சி சார்பில், 32 மகப்பேறு மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை மட்டுமின்றி, பிரசவமும் இலவசமாக பார்ப்பதால், ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு, சத்து பொருட்கள் அடங்கிய 'கிட்', இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, மகப்பேறு நிதியுதவியும் கொடுக்கப்படுகிறது.கடந்த ஆண்டு, மார்ச், மாதம் 'கொரோனா' தொற்று பரவல் அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பரவாமல் தடுக்க, மாநகராட்சி மருத்துவ குழுவினர், வீதி வீதியாக முகாமிட்டு, தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சளி, ரத்த மாதிரி சேகரிப்பது மட்டுமின்றி, நோய் பாதித்தவர்களை கண்டறிந்து, பாதுகாப்பாக சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். வீடு வீடாகச் சென்று, தொற்று அறிகுறி உள்ளவர்களை அடையாளம் கண்டனர். தொற்று பரவல் கட்டுப்படுத்த, மாநகராட்சி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணி மிகவும் அசாத்தியமானது.இதற்கிடையே, மாநகராட்சி மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெற்ற கர்ப்பிணிகளுக்கு, பிரசவமும் பார்க்கப்பட்டுள்ளது. தொற்று பரவிய காலத்தில், மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு வந்த கர்ப்பிணிகளை, அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைத்தனர். சில மருத்துவமனை டாக்டர்கள், பிரசவமும் பார்த்துள்ளனர்.அதனால், கடந்த ஆண்டு, ஏப்., முதல் டிச., வரையிலான, ஒன்பது மாதங்களில், 507 பிரசவம் நடந்துள்ளது.
அதிகபட்சமாக, ரத்தினபுரி மையத்தில், 74, ராஜவீதியில், 66, துடியலுாரில், 41 பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.'கொரோனா' தொற்று வேகமாக பரவிய ஏப்., மாதத்தில் கூட, 33, மே - 49, மிக அதிகமாக, ஜூனில், 81 பிரசவங்கள் நடந்துள்ளன. இது, குறைவு என்றாலும் கூட, தொற்று பரவல் தடுப்பு மற்றும் முகாம் பணிகளுக்கு இடையே, மகப்பேறு சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டது பாராட்டுக்குரியது.பிரசவம் பார்க்காத மையங்கள்மொத்தமுள்ள, 32 மகப்பேறு மருத்துவ மனைகளில், தொண்டாமுத்துார், குறிச்சி, குனியமுத்துார், வடவள்ளி, கவுண்டம்பாளையம், விளாங்குறிச்சி, நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லுார், பீளமேடு, கணபதி ஆகிய 10 மையங்களில், பிரசவம் பார்க்கும் பணியை, மருத்துவ குழுவினர் இன்னும் துவக்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE