கொரோனா மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை தொடர்பான, 27 அறிவிப்புகள் அமலுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை விவாதங்களின் போது, துறை ரீதியான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்புகளை செயல்படுத்த, அடுத்த சில மாதங்களில், தேவையான நிதி ஒதுக்கப்படும். அரசின் நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கான அரசாணை பிறப்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து, புதிய திட்டங்கள் அமலுக்கு வரும்.
இவ்வகையில், 2020 -- 21ம் நிதி ஆண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில், 27 புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஊரடங்கால், இவை அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வீட்டு வசதி வாரியத்துக்கு, 11; நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு, ஆறு; கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு, ஐந்து; குடிசை மாற்று வாரியத்துக்கு, மூன்று; சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வுக்கு, இரண்டு என, 27 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
குடியிருப்புகள் தொடர்பான சில திட்டங்களில், நிர்வாக பணிகள் துவங்கியுள்ளன. மற்ற திட்டங்களுக்கு, ஊரடங்கு காரணமாக எழுந்துள்ள பொருளாதார சூழலில், படிப்படியாக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மத்திய - மாநில அரசு நிதி ஒதுக்கீட்டை பெற, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன் திட்ட பணிகளை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
-- நமது நிருபர் - -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE