அனுப்பர்பாளையம்:குற்றங்களை தடுக்கும் வகையில் திருப்பூர் நகர பகுதி ரோந்து காவல் பணி துவங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகர பகுதியில், குற்றங்களை தடுக்கும் வகையிலும், ஏதாவது குற்றம் நடந்தால், போலீசாரிடம் எளிதில் தெரிவிக்கும் வகையிலும், ரோந்து காவல் பணி துவங்கப்பட்டுள்ளது.அவ்வகையில், வடக்கு சரகத்துக்கு உட்பட்ட வடக்கு, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி, ஆகிய நான்கு ஸ்டேஷனை சேர்ந்த, மொத்தம், 26 போலீசார் நியமிக்கப்பட்டு, 13 பகுதிகளில் பணியாற்றுவர்.
இதேபோல், தெற்கு சரகத்துக்கு உட்பட்ட தெற்கு, சென்ட்ரல், ரூரல், வீரபாண்டி ஆகிய நான்கு ஸ்டேஷனை சேர்ந்த, மொத்தம், 20 போலீசார் நியமிக்கப்பட்டு, 10 பகுதிகளில் பணியாற்றுவர்கள்ஒவ்வொரு போலீசுக்கும், பைக், ஹெல்மெட், ரிப்ளெக்டர் ஜாக்கெட், மொபைல் போன் வழங்கப்பட்டுள்ளது. ரோந்து காவல் பணி துவக்கவிழா சிறு பூலுவப்பட்டி அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
துவக்கி வைத்து, கமிஷனர் கார்த்திகேயன் பேசியதாவது:கஞ்சா, புகையிலை பொருள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். பொதுமக்களிடம் மரியாதையாக பேசி, இணைந்து பணியாற்றுங்கள். பொதுமக்களிடம் நம்பக தன்மையை ஏற்படுத்த வேண்டும். ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் குற்றங்களை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.போலீஸ் துணை கமிஷனர்கள் சுந்தரவடிவேல் (தலைமையிடம்), சுரேஷ்குமார் ( சட்டம் - ஒழுங்கு) உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE