திண்டிவனம்: ரோந்து சென்ற சப் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அடுத்த ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ், போலீஸ்காரர் சிவக்குமார் ஆகியோர் கடந்த 7ம் தேதி இரவு ரோந்து சென்றனர்.அப்போது, செஞ்சி ரோடு வேம்பூண்டி கூட்டுப்பாதை சந்திப்பில் இரு பைக்கில் வந்த மூவரை நிறுத்த முயன்றனர். பைக் நிற்காமல் சென்றதால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று மடக்கினர்.அதில் ஒருவர் பைக்கை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். மற்ற இருவரையும் பிடிக்க முயன்ற போது, அவர்கள் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜை கத்தியால் வெட்டினர். இதில் அவருக்கு இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பிற போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த கேசவன் மகன் சதீஷ்குமார்,24; நடராஜன் மகன் விஜயக்குமார், 23; என்பதும், தப்பி ஓடியவர் திருவண்ணாமலையை சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது.மேலும், சதீஷ்குமார் மீது சென்னை படாலம், மடிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்களின் பைக் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளும், விஜயக்குமார் மீது மறைமலைநகர் போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சரவணனை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE