இரவு முழுதும் சாலையில் படுத்து உறங்கிய முதல்வர் நாராயணசாமி, காலை 6 மணிக்கு தனது வீட்டிற்கு சென்று குளித்து விட்டு உடனடியாக போராட்டக் களத்திற்கு திரும்பினார்.போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு காலை டிபனாக இட்லி, பொங்கல், வடை, கேசரி பரிமாறப்பட்டது. மதிய உணவாக வெஜ் பிரியாணியும், சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது. கோஷமிட்டு களைத்த தொண்டர்கள் ஆர்வத்துடன் பிரியாணியை பெற்று சாப்பிட்டனர். காலை உணவு முடிந்தவுடன் 10:30 மணியளவில், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் மசால் வடை, ஆம்லெட் வழங்கப்பட்டது. அரசு கொறாடா அனந்தராமன் ஏற்பாட்டில், போராட்டம் நடக்கும் இடத்திலேயே அடுப்பு பற்ற வைக்கப்பட்டு பஜ்ஜி, போண்டா, வடை சுடச்சுட தயார் செய்யப்பட்டது. மாலையில் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. தொடர் தர்ணாவில் முதல்வர் நாராயணசாமியின் மகள் விஜயகுமாரி பங்கேற்றார். மகளிர் காங்., நிர்வாகிகள், தொண்டர்களுடன் 'கிரண்பேடியே திரும்பி செல்லுங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர் அமர்ந்திருந்தார். முதல்வர் அலுவலக சிறப்பு பணி அதிகாரி ராஜமாணிக்கம், முக்கியமான கோப்புகளை எடுத்துக் கொண்டு போராட்ட பந்தலுக்கு வந்தார். ஒவ்வொரு கோப்பையும் பொறுமையாக பார்த்து முதல்வர் நாராயணசாமி கையெழுத்திட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE