மேடவாக்கம் : மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையில் உள்ள, 'ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல்' விற்பனையகங்களில், நேற்று முன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
சென்னை, மேடவாக்கம் - மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல், 46. இவரது சகோதரர் துரை, 48. இருவரும், அதே பகுதியில், ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல் விற்பனையகம் நடத்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடித்து, விற்பனையகங்களை பூட்டி வீட்டிற்கு சென்றனர். துரை, விற்பனையகத்தின் மேல் தளத்தில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, விற்பனையகங்களில் இருந்து புகை வெளியேறியது. சற்று நேரத்தில் தீப்பற்றி எரிய துவங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, துரைப்பாக்கம் ஆகிய பகுதி தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், முடியவில்லை. இதையடுத்து, தேனாம்பேட்டையில் இருந்து, 'ஸ்கை லிப்டர்' தண்டையார் பேட்டை, எழும்பூரில் இருந்து, 'போம்' வாயிலாக தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப் பட்டன. தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில், 13 வாகனங்களின், ஆறு மணி நேர போராட்டத்திற்கு பின், நேற்று காலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE