சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், அ.தி.மு.க., தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.கூட்டத்தில், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, தன் முக கவசத்தை, மைக் அருகே கழற்றி வைத்து, பின் பேசினார். விதிகளை பின்பற்றுவதாக காமெடி!
பேசி முடித்த பின், முக கவசத்தை மறந்து, இருக்கைக்கு சென்றார். அதை கண்ட அமைச்சர் ஜெயகுமார், 'அண்ணே... முக கவசத்தை மறந்து சென்று விட்டீர்கள்' என்றார். உடனே, கே.பி.முனுசாமி, 'அதை எடுத்து தாருங்கள்' என்பது போல கையை நீட்டினார்.'அதை, நான் எடுக்க மாட்டேன்' என, அமைச்சர் ஜெயகுமார் கூற, கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
சுதாரித்த கே.பி.முனுசாமி, 'இது தான், அ.தி.மு.க., கட்சி. நாங்கள், விதிகளை சரியாக பின்பற்றுவோம்' என்றார்.அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவர், 'தியேட்டர், பார் போன்றவற்றிற்கு அனுமதி கொடுத்ததும் இதே கட்சி தானே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
'ஆளுங்கட்சிக்கு புரிஞ்சா சரி!'
வேலுார், கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடியில், தமிழக அரசு அறிவித்த, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவை, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி, சமீபத்தில் துவக்கி வைத்தார்.அதன் பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'அ.தி.மு.க., அரசின் அனைத்துத் திட்டத்தையும், குற்றம் சொல்வது தான், தி.மு.க.,வுக்கு வாடிக்கை. கடந்தாண்டு, பொங்கல் பரிசு கொடுத்தபோது, நீதிமன்றம் சென்று தடை பெற முயன்றனர்.
தற்போது மீண்டும், 2,500 ரூபாய் வழங்கும் போதும், தடை பெற முயற்சிக்கின்றனர்' என்றார். அங்கிருந்த மூத்த நிருபர், 'போன ஆண்டு பொங்கலுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தாங்க... ஊரடங்கு நிவாரண நிதியாகவும், 1,000 ரூபாய் தான் கொடுத்தாங்க... இப்போ மட்டும் ஏன், 2,500 ரூபாய் கொடுக்குறாங்கன்னு மக்களுக்கு தெரியாதா...' என்றார்.
அருகிலிருந்த இளம் நிருபர், 'ஜனங்க யோசிச்சு தான் ஓட்டு போடுவாங்கன்னு, ஆளுங்கட்சிக்கு புரிஞ்சா சரி...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
'அது தான் எம்.ஜி.ஆரின் புகழ்!'
சென்னை, திருவொற்றியூர் தேரடியில், அ.ம.மு.க., வினர், சமீபத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அங்கு, முன்னாள் முதலவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவ்வழியாக சென்ற நடுத்தர வயதுடைய ஒருவர், எம்.ஜி.ஆர்., படத்துக்கு முன் நின்று, ‛செல்பி' எடுத்துக் கொண்டதோடு, படத்தையும் தொட்டு வணங்கினார்.
இதைப் பார்த்த, இளம் நிருபர் ஒருவர், 'அவனவன் நடிகையோடு, 'செல்பி' எடுக்க ஆர்வம் காட்டுற இந்த காலத்துல, இவரு, எம்.ஜி.ஆர்., படத்துடன் எடுக்குறாரே...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'அதனால தான் பா, அவரு இறந்து, 33 ஆண்டுகளானாலும், இன்னும் அவர் பெயரை சொல்லி, அரசியல் நடத்துறாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE