புதுடில்லி : கிழக்கு லடாக்கில், எல்லைக் கோட்டை தாண்டி அத்துமீறி நுழைந்த, சீன ராணுவ வீரரை, இந்திய ராணுவம் கைது செய்து உள்ளது.
லடாக் எல்லை பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து, இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த ஆண்டு, அக்., 19ல், எல்லைக் கோட்டை தாண்டி, சீன ராணுவ வீரர் ஒருவர், கிழக்கு லடாக்கில் நுழைந்தார். டெம்சோக் பகுதியில் சுற்றித் திரிந்த அவரை, இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். அவரை விடுவிக்கும்படி, சீன அரசு கேட்டுக் கொண்டது. அதை ஏற்று, கிழக்கு லடாக்கில், சுசுல் - மோல்டோ எல்லையில் பிடிபட்ட சீன ராணுவ வீரர் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று கிழக்கு லடாக்கில், சீன ராணுவ வீரர் ஒருவர், அத்து மீறி நுழைந்துள்ளார்.
இதைப்பார்த் இந்திய ராணுவத்தினர் உடனடியாக, சீன ராணுவ வீரரை கைது செய்தனர். அவரிடம் எல்லை தாண்டியது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு மே மாதம், கிழக்கு லடாக்கில், சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொண்டது. இதை, இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவத்தினர், 20 பேர் உயிர் இழந்தனர். சீனா தரப்பில், 36 பேர் பலியானதாக அமெரிக்கா தெரிவித்தது. இதையடுத்து, லடாக்கில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன. சீனாவும், இதே அளவிலான ராணுவத்தினரையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. இதனால், எல்லை பகுதிகளில், எட்டு மாதங்களாக பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், சீன வீரர்கள், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை, மேலும் அதிகரிக்க வைத்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE