புதுடில்லி : அமெரிக்காவின், சான் பிரான்சிஸ்கோ - கர்நாடகா மாநிலம் பெங்களூரு இடையே, முழுதும் பெண் விமானிகள் அடங்கிய குழுவினருடன், ஏர் - இந்தியாவின் முதல் நேரடி விமான சேவை நேற்று துவங்கியது.
ஏர் - இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை:ஏர் - இந்தியா நிறுவனம், சான் பிரான்சிஸ்கோ - பெங்களூரு இடையே, முதன் முறையாக நேரடி விமான சேவையை, முழுதும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுவினருடன் துவக்கி உள்ளது.இந்திய நேரப்படி, நேற்று இரவு, 8:30க்கு சான்பிரான்சிஸ்கோவில் புறப்பட்ட விமானம், 13 ஆயிரத்து, 993 கி.மீ., துாரத்தை கடந்து, நாளை மாலை, 3:45க்கு பெங்களுரு, கெம்பகவுடா விமான நிலையம் வந்தடையும். போயிங் விமானத்தை, 8,000 மணி நேரம் இயக்கிய அனுபவம் உள்ள, விமானி ஜோயா அகர்வால் தலைமையில், விமானிகள், அகன்ஷா சோனவார், ஷிவானி மன்ஹஸ் உள்ளிட்டோரின் துணையுடன் விமான சேவை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விமானத்தில், 238 பேர் பயணிக்கின்றனர். ஏர் - இந்தியா நிறுவனம், முதன் முறையாக, உலகின் நீண்ட துார விமான சேவையை மேற்கொள்கிறது. இந்தியாவில் வேறு எந்த விமான சேவை நிறுவனமும், இத்தகைய நீண்ட துார நேரடி போக்குவரத்தை இதுவரை மேற்கொண்டதில்லை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ''ஏர் - இந்தியாவின் பெண்கள் சக்தி உலகளவில் உயர்ந்துள்ளது,'' என, விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஹர்தீப் புரி, 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE