ராமநாதபுரம்: இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாகவும் வலிமை மிக்க நாடாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார், என பா.ஜ., மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடந்த நம்ம ஊர் பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக இந்நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பராக,சகோதரராக, தோழனாக, பாதுகாவலராக விளங்குகிறார். ஒன்று முதல் ஐந்துஏக்கர் வைத்துள்ளவிவசாயிகள் பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்தியரசு 41 லட்சம் விவசாயிகளுக்கு கடந்த வாரம் ரூ.2ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.
விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்வதற்காக வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாகவும் வலிமைமிக்க நாடாக மாறியுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனா தடுப்புமருந்து கண்டுபிடித்து, நாட்டில் உள்ள அனைத்துகுடிமகன்களுக்கும் ஊசி இலவசமாக கிடைக்கஏற்பாடு செய்துள்ளார், என்றார்.சிவகங்கையில் பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது: நம்ம ஊரு பொங்கல் விழா தமிழர் கலாசாரம், பண்பாட்டினைபிரதிபலிக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது. ஜன., 14ல் பா.ஜ., தேசியதலைவர் ஜெ.பி.நட்டா திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் நம்ம ஊரு பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழு தலைவர் எச்.ராஜா தலைமையில் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கருத்து கேட்கின்றனர்.
இது பொதுமக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். ஜன.,18 முதல் 25 வரை அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஒரு சாவடிக்கு 25 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். ஜன.,14 ல் 100 நாட்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் சிறப்பு திட்டத்தை துவக்க உள்ளோம்.விவசாயிகள் சட்ட மசோதாவை வைத்து அரசியல் செய்ய நினைத்த தி.மு.க., தலைவர்ஸ்டாலினுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம் அதிகளவில் பயன் அடைந்துள்ளது.
தமிழகத்தில் வரும் தேர்தலில் பா.ஜ., போட்டியிடும் தொகுதி மட்டுமின்றி, கூட்டணி கட்சிகள் நிற்கும் அனைத்து தொகுதியிலும் தேர்தல் பணிகளை தயார்படுத்தி வருகிறோம். டில்லி விவசாயிகள் போராட்டம் காங்., மற்றும் கம்யூ., கட்சிகள், நக்சலைட்களால் துாண்டப்பட்ட போராட்டம், என்றார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE