சென்னை : ''ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசுவோர் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமாவளவன் தொடர்ந்து, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருவதை, அவரது கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும்,'' என, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
அவரது பேட்டி: 'தமிழ் கடவுளாக முருகனை ஏற்றுக் கொண்டால், அந்த கனத்திலேயே, விநாயகரும் தமிழ் கடவுளாகி விடுவார். நாம் அனைவரும் ஹிந்து கடவுள்களை ஏற்றுக் கொண்டதாகி விடும். 'ஹிந்து கடவுள்களை, முருகன், விநாயகர் என, யாரை ஏற்றுக் கொண்டாலும், ஹிந்து என்ற அடையாளத்திற்குள் வந்து விடுவீர். இது மிகவும் ஆபத்தானது' என, திருமாவளவன் பேசி உள்ளார்.அவர் கூறியதுபோல், தமிழ் கடவுள், இங்கிலீஸ் கடவுள், ஹிந்தி கடவுள் என்று கிடையாது; எல்லாம் ஹிந்து கடவுள் தான். நம் கடவுளுக்கு, ஜாதி, மதம், மொழி கிடையாது.
ஹிந்து என்ற வார்த்தை அனைவரையும் ஒன்றுபடுத்துகிறது. இது, திருமாவளவனிடம், அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.விநாயகருக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிவபெருமான், சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்தவர். தமிழகத்தில் உள்ள அனைத்து கடவுள்களும், தமிழுக்கு உரிமையானவர்கள்.குல தெய்வம் மீது, ராமாயணம், மகாபாரதத்தை திணிப்பதாக, திருமாவளவன் கூறுவது, அவரது தமிழ் அறிவு குறைவை காட்டுகிறது. ராமாயணத்துடன் தொடர்புடைய கோவில்கள், ஊர்கள், தமிழகத்தில் உண்டு. திருமாவளவன் கட்சி சார்பில், கிறிஸ்துமஸ் விழா, ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்துகிறார்.
அங்கு யேசுநாதர், அல்லா தமிழ் கடவுளா என்று கேட்கும் துணிச்சல் திருமாவளவனுக்கு உண்டா? அவர் வேண்டுமென்றே, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார். இதை, அவரது இயக்கத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.திருமாவளவனுக்கு பல நாக்கு. இப்படித்தான் பேசுவார். அவர் ஜாதி, மத அரசியல் நடத்துவதை கைவிட வேண்டும். ஹிந்து மத கடவுள்களை இழிவுப்படுத்துவதை, நிறுத்திக் கொள்ள வேண்டும்.இஸ்லாம், கிறிஸ்துவம் குறித்து ஏதாவது கூறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசு, ஹிந்து மதத்தை இழிவுப்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE