.புதுடில்லி 'சீன துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு உள்ள சரக்கு கப்பல்களில் இருக்கும், 39 இந்தியர்கள், வரும், 14ல் நாடு திரும்ப உள்ளனர்' என, மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

நம் நாட்டின் சரக்கு கப்பல் ஜக் ஆனந்த், ஜூன், 13 முதல், சீனாவின் ஹெபாய் மாகாணம் ஜிங்டாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் மாலுமிகள் உட்பட, 23 பேர் உள்ளனர். மற்றொரு சரக்கு கப்பலான அனஸ்தேசியா, 16 பேருடன் காபீடியன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால், இந்த கப்பல்களின் சரக்குகளை இறக்கவோ, அவை புறப்பட்டு செல்லவோ சீன அரசு அனுமதிக்கவில்லை.'கப்பலில் இருப்போரை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும்' என, சீன அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
பீஜிங்கில் உள்ள நம் நாட்டின் துாதர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன், இந்த பிரச்னை குறித்து, தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தினார்.இதையடுத்து, கப்பல்களில் இருக்கும், 39 பேரும், நாடு திரும்ப சீனா அனுமதி அளித்துள்ளதாக, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'சீன துறைமுகங்களில், பல மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ள இரு சரக்கு கப்பல்களில் இருக்கும், 39 பேரும், வரும், 14ம் தேதி நாடு திரும்புவர். 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முயற்சிகள் வாயிலாக, இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது' என, கூறப்பட்டு உள்ளது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE