கோவை:'கோயமுத்துார் விழா' வின் ஒரு பகுதியாக, 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்ட மேலாண்மை ஆலோசகர் கோபாலகிருஷ்ணனுடன், 'ஜூம் மீட்டிங்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; பலரும் தங்களது சந்தேகங்களை கேட்டனர்.திட்டம் தொடர்பாக, அவர் பேசியதாவது:கோவை மாநகராட்சியில், 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 1.50 லட்சம் இணைப்புதாரர்களுக்கு, 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் சேவை வழங்கப்பட உள்ளது. 36 தொட்டிகள் இருக்கின்றன; கூடுதலாக, 32 தொட்டிகள் கட்டுதல் மற்றும் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.தொட்டிக்கு அருகில்; தொட்டிக்கு வெகுதொலைவில்; குடிநீர் சப்ளையாகும் பகுதியில் மேடான இடம்; பள்ளமான இடம் என, 108 மீட்டர் ஏரியாக்கள் தேர்வு செய்துள்ளோம். இப்பகுதிகளில் மீட்டர் பொருத்தி, ஆன்-லைனில் கண்காணிக்கப்படும்.ஆர்.எஸ்.புரம், செல்வபுரம் ரோடு, சவுரிபாளையம், திருச்சி ரோடு, எச்.ஐ.எச்.எஸ்., காலனி உள்ளிட்ட பகுதிகளில் குழாய் மாற்றப்பட்டுள்ளது. வரும், 2023, ஆக., மாதம் செயல்பாட்டுக்கு வரும். தொட்டியில் இருந்து, 7 மீட்டர் அழுத்தத்தில், நுகர்வோருக்கு குடிநீரை சேர்ப்பிப்பது, ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பு.அனைத்து இணைப்புக்கும் புதிய மீட்டர் பொருத்தி வருகிறோம். 'மீட்டர் ரீடிங்' எடுத்து, மாநகராட்சி பெயரில் பில் வழங்கி, கட்டணம் வசூலித்து, மாநகராட்சி கணக்கில் செலுத்தும் பணியை, அந்நிறுவனம் செய்யும்.குடிநீர் கட்டணத்தை மாநகராட்சியே நிர்ணயிக்கும். ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் கணக்கில் வரும் என்பதால், மாநகராட்சியின் வருவாய் அதிகரிக்கும்.இனி, குடிநீரை தொட்டியிலோ, குடத்திலோ சேமித்து வைக்க வேண்டியதில்லை. தேவையான போது, பாதுகாக்கப்பட்ட, சுத்தமான குடிநீரை பெறலாம்; பணத்தையும் மிச்சப்படுத்தலாம். குடிநீர் சப்ளையை தொடர்ந்து கண்காணிப்பதால், கசிவு ஏற்படும் இடங்களை உடனுக்குடன் கண்டறிந்து, தீர்வு காணப்படும்.இவ்வாறு, கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.'சூயஸ்' நிறுவனம் ஏன்?கோபாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில், ''ஓராண்டில், 50 ஆயிரம் இணைப்புகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கிய நிறுவனங்கள், ஒப்பந்தத்தில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. நம் நாட்டில், அவ்வாறு, வேறெந்த நகரங்களிலும், 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. வெளிநாட்டில் இருந்து, இரு நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், திட்ட மதிப்பீட்டை காட்டிலும், 10 சதவீதம் குறைவாக, 'டெண்டர்' கோரிய, 'சூயஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE