வீரபாண்டி: தை முதல் நாளில், பழநி முருகனை தரிசிக்க, 50ம் ஆண்டாக, சேலத்தில் இருந்து, பாதயாத்திரையை, பக்தர்கள் தொடங்கினர்.
சேலம் மாவட்டம், பூலாவரியைச் சேர்ந்தவர் பழனிசாமி, 70. இவரது தலைமையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் இணைந்து, 50 ஆண்டுக்கு முன், 'திருமுருகன் திருச்சபை' அமைப்பை தொடங்கினர். தொடர்ந்து, பூலாவரியில் இருந்து, பழநிக்கு பாதயாத்திரை சென்று, தை முதல் நாளில், பழநிமலை முருகனை தரிசித்து வருகின்றனர். நடப்பாண்டு, 50ம் ஆண்டாக, பாதயாத்திரை செல்வோர், கடந்த ஆண்டு நவ., 23 முதல், ஒருவர் பின் ஒருவராக, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்கள், நேற்று காலை, பூலாவரி முருகன் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, கையில் வேல் ஏந்தி, பாதயாத்திரையை தொடங்கினர். தொடர்ந்து, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், தரிசனம் செய்துவிட்டு, கோவிலுக்கு வெளியே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை, 4:00 மணிக்கு, பழநியை நோக்கி, 'கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா' கோஷம் முழங்க, நடைபயணத்தை தொடங்கினர்.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: தமிழ் கடவுள் முருகனை, தை முதல் நாளில் தரிசித்தால், ஆண்டு முழுதும் நல்ல பலன் கிடைக்கும். 50ம் ஆண்டாக, பாதயாத்திரையை தொடங்கி உள்ளோம். காலை, 2:00 முதல், 7:00 மணி வரை, மாலை, 3:00 முதல், இரவு, 10:00 மணி வரை என, தினமும், 50 கி.மீ., நடப்போம். ஆண்டுதோறும், பாதயாத்திரை செல்வதால், வழியில் கோவில் நிர்வாகிகள், மடம், அன்பர்கள், அன்னதானம் வழங்கி, தங்க இடம் கொடுத்து உபசரிக்கின்றனர். தை முதல் நாளான, ஜன., 14ல் பழநியை அடைந்து, முருகனை தரிசித்து, அன்றிரவு பஸ் மூலம் சேலம் வருவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE