ஆத்தூர்: தி.மு.க., நடத்திய கிராம சபை கூட்டத்தில், தமிழக அரசை விமர்சித்த, பெண் கிராம உதவியாளரின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, துக்கியாம்பாளையம் ஊராட்சி, ஆறாவது வார்டை சேர்ந்த, தி.மு.க., கிளை செயலர் சேகர். இவரது மனைவி கல்பனா, 40. இவர், கல்யாணகிரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன், ஏற்காடு தொகுதி, முளுவியில், தி.மு.க., சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'மைக்' மூலம், தமிழக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், கல்பனா பேசுகையில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்க வேண்டும். 2,500 ரூபாய் ஓட்டுக்கு கொடுப்பது தான் உண்மை. 10 ஆண்டுக்கு முன், நமக்கு அறிவு இல்லை; 10 ஆண்டு கஷ்டத்தை, நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். ஸ்டாலின் சொன்ன பின் தான், இந்த பணமும் மக்களுக்கு தருகின்றனர். அ.தி.மு.க., 1,000 முதல், ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தாலும், ஸ்டாலினை தான் முதல்வராக்க வேண்டும்' என்றார். இதுகுறித்து, கல்பனா கூறுகையில், ''தி.மு.க., கூட்டத்தில், அரசுக்கு எதிராக பேசவில்லை. கிராம உதவியாளராக ஆறு ஆண்டாக பணிபுரிகிறேன். நான், தி.மு.க.,வை சேர்ந்தவர் என்பதால் அழைப்பு கொடுத்தனர். தற்போது, ஏற்காடு தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,வில், 'சீட்' கேட்டுள்ளேன்,'' என்றார். இதுதொடர்பாக, துறைரீதியான விசாரணைக்கு, சேலம் கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து, கல்பனாவை, 'சஸ்பெண்ட்' செய்து, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் வெங்கடேசன், நேற்று உத்தரவிட்டார். தாசில்தார் வெங்கடேசன் கூறுகையில், ''ஓட்டுச்சாவடி மைய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர் கல்பனா, தமிழக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியதாக, வீடியோ ஆதாரத்துடன் புகார் வந்ததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE