பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டத்தில், வரும், 13 வரை, வானிலை அடிப்படையில் வேளாண் ஆலோசனை குறித்து, சந்தியூர், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் கூறியதாவது: லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்ப நிலை, 22 முதல், 31 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். காற்றின் வேகம், மணிக்கு, 8 முதல் 10 கி.மீ., வீசும். பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துடன் ஒட்டும் திரவம் கலந்து தெளிக்கவும். தென்னையில், ரூகோஸ் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த, என்கார்சீயா ஒட்டுண்ணியை, ஏக்கருக்கு, 100 எண்ணிக்கையில் விட வேண்டும். இறைவிழுங்கியான கிரைசோபாவை ஏக்கருக்கு, 500 முட்டைகள் என்ற அளவில், ஈ அதிகமுள்ள இலைகளில் கட்டிவிட வேண்டும். இயற்கை எதிரிகளை, தென்னந்தோப்புகளில் பயன்படுத்தும்போது, பூச்சிகொல்லிகளை பயன்படுத்த கூடாது. நெல் பயிரில் மஞ்சள் கரிப்பூட்டை நோயை தடுக்க, ஒரு கிலோ விதைக்கு, கார்பென்டசிம், 2.0 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். கதிர் இலைப்பருவம், பால் பருவங்களில், பூசண நோய் தாக்குதலை தடுக்க, ஒரு லிட்டர் நீரில், காப்பர் ஆக்சிகுளோரைடு, 2.5 கிராம் அல்லது ப்ரோபிகோனசோல், 10 மில்லி ஆகியவற்றில், ஏதோ ஒன்றை தெளிக்க வேண்டும். தூர்விடும் பருவம், பூத்தல் முன் பருவங்களில், ஒரு லிட்டர் நீரில், ஹெக்சாகோனசொல், 1 மில்லி தெளிக்கலாம். வெண்டையில் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீரில், அசாடிராக்டின், 1 சதவீதம் இசி 3 மில்லி கலந்து தெளிக்கலாம். கத்திரியில் குருத்து, காய் துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீரில், அசாடிராக்டின், 1.0 சதவீதம் இசி 3.0 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 20 சதவீதம் இசி 2.0 மில்லி தெளிக்கவும். இவ்வாறு அவர் கூறினார்.
மழைக்கு எங்கெங்கு வாய்ப்பு? சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையப்படி, வரும், 13 வரை, 20 வட்டாரத்தில் பெய்யும் மழை அளவு விபரம்: அயோத்தியாப்பட்டணம், 51.5 மி.மீ., இடைப்பாடி, 41.9, கடையாம்பட்டி, 48.9, கொங்கணாபுரம், 46.4, மகுடஞ்சாவடி, 59.8, நங்கவள்ளி, 24.2, ஓமலூர், 30.1, பனமரத்துப்பட்டி, 40.1, சேலம், 37.9, சங்ககிரி, 56.1, தாரமங்கலம், 33, வீரபாண்டி, 39.9, ஏற்காடு, 69.5, ஆகிய வட்டாரங்களில், மித மழை பெய்யும். ஆத்தூர், 19.5, கெங்கவல்லி, 9.9, கொளத்தூர், 8.24, மேச்சேரி, 17.2, பெத்தநாயக்கன்பாளையம், 16.6, தலைவாசல், 16.8, வாழப்பாடி, 14.9 என, அந்த வட்டாரங்களில் லேசான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE