தர்மபுரி: 'சிறந்த முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விருதுகள் வழங்கப்பட உள்ளன' என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், தோட்டக் கலை பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில், அதிக லாபம் கிடைப்பதால், இதன் மீது, விவசாயிகளின் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. தோட்டக்கலை பயிர்களை, தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு, சிறந்த முறையில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழக அரசின் சார்பில், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தலா, 10 சாதனையாளர் விருதுகளை வழங்கி வரும் நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதில், காய்கறி, பழங்கள், மூலிகை, வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மலர், நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் உள்ளிட்ட, 10 வகையான பயிர் சாகுபடி சாதனையாளர்களுக்கு, இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைந்து விவசாயிகளும், இதில் பங்கேற்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், www.tnhorticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE