கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், கள்ளக்காதல் விவகாரத்தால், எலக்ட்ரீஷியன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அடுத்த கொண்டேப்பள்ளியை சேர்ந்த சென்னப்பன் மகன் திருப்பதி, 39, எலக்ட்ரீஷியன்; நேற்று முன்தினம் மதியம், தன் பைக்கில் வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர். நேற்று மாலை, திருப்பதி ஓட்டிச்சென்ற பைக், பாஞ்சாலியூரில் செங்கல்சூளை அருகே நின்றிருந்தது. இதை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைப்பற்றி, திருப்பதியை தேடினர். அப்போது, அங்கு பனைமரத்தின் அடியில், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணை குறித்து, போலீசார் தெரிவித்ததாவது: கொலையான திருப்பதிக்கும், பாஞ்சாலியூர் அடுத்த பூசாரிப்பட்டியை சேர்ந்த மற்றொரு திருப்பதி என்பவரின் மனைவிக்கும், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த அப்பெண்ணின் கணவர், திருப்பதியை கண்டித்துள்ளார். ஆனாலும், திருப்பதி கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவர், திருப்பதியை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. அவரை பிடித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE