சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியை இந்திய அணி 'டிரா' செய்யுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா அரைசதம் அடித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் (அடிலெய்டு) வீழ்ந்த இந்தியா, அடுத்து மெல்போர்னில் வென்றது. தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், சிட்னியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338, இந்தியா 244 ரன்கள் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்து, 197 ரன்கள் முன்னிலை பெற்றது. ஸ்மித் (29), லபுசேன் (47) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. லபுசேன் 73 ரன் எடுத்தார். வேட் 4 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் தன் பங்கிற்கு 81 ரன்கள் எடுத்து திரும்பினார். கேமரான் கிரீன் டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் அடித்தார். இவர் 84 ரன்னுக்கு பும்ரா பந்தில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்து, 'டிக்ளேர்' செய்தது.
ரோகித் அரைசதம்
இரண்டாவது இன்னிங்சில் 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த போது, சுப்மன் கில் (31) அவுட்டானார். ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்து திரும்பினார். நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி கைவசம் 8 விக்கெட்டுகள் மீதமுள்ளன. ஜடேஜா பேட்டிங் செய்ய வரமாட்டார் என்பதால், 7 விக்கெட்டுகள் தான் உள்ளன. ஆனால் ஆஸ்திரேலிய இலக்கை எட்ட இன்னும் 309 ரன்கள் தேவைப்படுகிறது. நாளை கடைசி நாளில் இந்த இலக்கை எட்டுவது கடினம். ஒருவேளை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போட்டியை இந்திய 'டிரா' செய்யலாம். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE