தஞ்சாவூர் : சிவகங்கை அருகே வி.புதுகுளம் கண்மாயில் கி.பி.12-13ம் ஆண்டுக்கு இடைப்பட்ட பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லுாரி தமிழ்த் துறை உதவி பேராசிரியர் கண்ணதாசன் பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அந்த கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தனர்.இது குறித்து தில்லை கோவிந்தராஜன் கூறியதாவது;
சிவகங்கை மாவட்டம் வைகையாற்றின் வடகரையில் அமைந்துள்ள வேம்பற்றுார் அருகே வி.புதுகுளத்தில் ஐந்து தலைப்புகளைக் கொண்ட கண்மாய் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அக்கருங்கற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. துண்டு கல்வெட்டுகளில் நிலங்களின் எல்லைகளும் அதன் ஆவணத்தை எழுதியவர்களின் பெயர்கள் மட்டுமே காணப்படுகின்றன.பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் வேம்பற்றுார் குலசேகர சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் வழங்கப்பெற்றதையும் இப்பகுதியில் வைகையாறு சீவல்லபபேராறு என்று அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.சங்க காலந்தொட்டே வேம்பற்றுாரில் வேம்பற்றூர் குமரனார் பெரும்பற்ற புலியூர் நம்பி சிராப்பள்ளி அந்தாதி பாடிய நாராயணக்கவி முதலானோர் வாழ்ந்துள்ளனர்.
நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும் மற்றொரு துண்டு கல்வெட்டில் சீவல்லவனான களவழி நாடாள்வான் என்பவரது பெயர் குறிக்கப்பட்டிருப்பதோடு ஆறும் மடையும் அவரது பெயரில் வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது.சடையவர்மன் குலசேகர பாண்டியனின் 13வது ஆட்சி ஆண்டைச் சார்ந்த திருவாதாவூர் கல்வெட்டிலும் செயங்கொண்ட சோழன் சீவல்லவனான களவழி நாடாள்வான் பெயர் குறிக்கப் பெற்றிருக்கிறது. இப்பகுதியில் அரசியல் பின்புலத்துடன் குறுநிலத் தலைவனாக அவர் விளங்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE