கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற தி.மு.க., எம்.பி., கனிமொழியை கோவையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை கண்டித்து கனிமொழி, உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்படைய அனைத்து நபர்களையும் கைது செய்ய வலியுறுத்தி, திமுக மகளிர் அணி சார்பில், அக்கட்சியின் மகளிரணி செயலர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் இருந்து பொள்ளாச்சியில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த கனிமொழியின் காரை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால், அங்கு போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கனிமொழி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் தடையை மீறி, பொள்ளாச்சி சென்று போராட்டத்தில் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர்களை போலீசார் வெளியிட்டு அச்சுறுத்தியதோடு, இன்று வரை பாதிக்கப்பட்டவர்களை அந்த கும்பல் மிரட்டி வருகிறது. இந்த வழக்கில் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும் என ஆளுங்கட்சியினர் நினைக்கின்றனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தட்டி கேட்காமல் இருந்தால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து விடுவார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என விளம்பரம் செய்யும் அதிமுக ஆட்சியில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE